Tuesday, October 20, 2020

நாள் 4 - தேவனுக்குள் மேன்மை பாராட்டி அவரைத் தொழுவோம்

 

நாள் 4 - தேவனுக்குள்  மேன்மை பாராட்டி அவரைத் தொழுவோம்

சங்கீதம் : 44 : 8

தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம். உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.

·         தேவனுக்குள் மேன்மை பாராட்டுதல் தினமும் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று.

·         கர்த்தரிடமிருந்து நன்மைகளைப் பெறும் போது மட்டும் உணர்ச்சிவசப்பட்டு தேவனைக் குறித்து மேன்மை பாராட்டக் கூடாது.

·         நம் ஒரே நம்பிக்கை தேவன் மட்டுமே.  நீரே என் நம்பிக்கை என்பதையும் நாம் அவரை சார்ந்து வாழ்கிறோம் என்பதையும் தினம் தினம் வெளிப்படுத்த தயங்க கூடாது.

·         தேவனுக்குள் மேன்மை பாராட்டுதல் என்பது தேவனை துதித்தல் ஆகும்.

·         தேவனுடைய நாமத்தை தினமும் இடைவிடாமல் துதிக்க வேண்டும்.

சங்கீதம்: 34: 2

கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும் சிறுமை பட்டவர்கள் அதைக் கேட்டு மகிழ்வார்கள்

சங்கீதம்: 30: 12

என் தேவனாகிய கர்த்தாவே உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

2 கொரிந்தியர்: 10: 17

மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டக் கடவன்.

ஏன் தேவனுக்குள் மேன்மை பாராட்ட வேண்டும்?

எரேமியா: 9 :24

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நாம் தைக் குறித்து மேன்மை பாராட்டுகிறோம்?
*      நம்முடைய ஆஸ்தியைக் குறித்தா?
*      நம்முடைய அந்தஸ்தைக் குறித்தா?
*      நம்முடைய படிப்பைக் குறித்தா?

இவையாவும் நிலையற்றது. நிலையான தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்.  ஏனெனில்

  • *      அவர் கிருபை உள்ளவர்
  • *      நீதி செய்கிறவர்
  • *      நியாயம் செய்கிறவர்

நான் அவரைக் குறித்து மேன்மை பாராட்டுவதில் அவர் பிரியமாய் இருக்கிறார். கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்டுவோம் அவருக்கு பிரியமாய் இருப்போம்

Tuesday, October 6, 2020

நாள் 3 - துதித்துப் பாடி தேவனை தொழுது கொள்ளுவோம்

 சங்கீதம் :66:4
பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். 

மேசியாவாகிய கர்த்தர் மனிதனைப் படைத்து , தமது ஜனத்தை ரட்சித்து மீட்டுக்கொண்டிருக்கிறார். சபைக்கு தலையாய் இருக்கிற நம் ரட்சகர் வணக்கப்படத்தக்கவர்.  

அவர் மேல் விசுவாசம், நம்பிக்கை, அன்பு கொண்டவர்களாய் உள்ளான பரிசுத்தத்தோடு வணங்க வேண்டும். மேலும் நம் சொற்கள், செயல்கள்,கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் பிறர் நாம் கர்த்தரை பரிசுத்தத்தோடு தொழுது கொள்வதை காண வேண்டும். 

இந்த பரிசுத்தமான தொழுதால் பூமியின் மீதெங்கும் உண்டாகும். பூமியெங்கும் ராஜாவாக கிறிஸ்து இருப்பார். 

சகரியா :4:9

அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார் அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். 

சகரியா :4:16

  பின்பு எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும் வருஷாவருஷம் வருவார்கள்.   

  • கர்த்தரை அறியாத மற்றும் அவருக்கு விரோதமாக இருந்த ஜாதிகளும் கூட சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை தொழுது கொள்ளும் காலம் அது. 
வெளிப்படுத்தல் :15:4

கர்த்தாவே யார் உமக்குப் பயப்படாமலும் உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர் எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். 

அந்நாளில் 
  • பூமியின் மீதெங்கும் உள்ளவர்கள் கர்த்தருக்கு பயப்படுவார்கள். அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர் பரிசுத்தர் நீதியின் தேவன் என்பது அனைவருக்கும் தெரியும்படியான காலமாய் இருக்கும். 
  • பூமியின் மீதெங்கும் கர்த்தரைப் பணிந்து கொள்ளும் ஜனங்கள் அவரைத் துதித்துப் பாடுவார்கள். 
    • மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுவார்கள். அந்நாளில் தேவரீருடைய மகத்துவமும் ஆச்சரியமுமான கிரியைகளை பூமியில் உள்ள அனைத்து குடிகளும் கண்டு கொள்வார்கள். அவருடைய வழிகள் நீதியும் சத்தியமும் உள்ளவைகள் என்பதையும் உணர்ந்து கர்த்தரைத் துதித்துப் பாடுவார்கள். (வெளிப்படுத்தல் :15:3).
    • கர்த்தரால் அனைத்து ஜனங்களும் மீட்கப்பட்டிருப்பார்கள்.
  • பூமியின் மீதெங்கும் உள்ளவர்கள் கர்த்தருடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள். 
    • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா:9:6)
கர்த்தரைப் பணிந்து தொழுது கொள்ளுவதில் துதித்தல் ஒரு முக்கியமான செயலாக இருக்கிறது. கர்த்தருடைய கரத்தில் இருந்து நன்மைகளைப் பெரும் போது மட்டுமல்ல எந்த சூழ்நிலை ஆயினும் கர்த்தரைத் துதித்தல் இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது. 

  • நாமும் கர்த்தரைப் பணிந்து கொள்ளுவோம். 
  • அவருடைய நாமத்தைச் சொல்லித் துதிப்போம். 
  • அவர் நம் வாழ்வில் 
    • அதிசயம் செய்வார் 
    • ஆலோசனைத் தருவார் 
    • வல்லமை உள்ள தேவனின் கரத்தின் கீழ் அடங்கி இருந்து நித்தியத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் 

Friday, October 2, 2020

நாள் 2 - ஆவியோடும் உண்மையோடும் தேவனை தொழுது கொள்ளுவோம்

 யோவான்:4:24

தேவன் ஆவியாயிருக்கிறார் அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 

கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் . கடவுளை தொழுதல் என்பது சுத்தமுள்ள இருதயத்தோடு இருக்க வேண்டும். மனுஷர் பார்க்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது, ஜெபக்கூட்டங்களுக்கு செல்வது, ஆலயம் செல்வது போன்றவைகளை செய்தல் கூடாது. மாய்மாலமாய் தேவனை தொழுது கொள்ளுதல் கூடாது.

மனத்தாழ்மையான ஒரு இருதயத்தோடு தேவனை தொழுது கொள்ள வேண்டும்.  தேவனோடு ஒரு பரஸ்பர உறவை ஏற்படுத்திக்கொள்வதே அவரை உண்மையாய் தொழுது கொள்ளுதல் ஆகும். சுய நலம் கூடாது.

I சாமுவேல்:16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

தாழ்மையுடன் கர்த்தருக்கு பயந்து அவரைக் கூப்பிடுகிறவர்களுக்கு பதில் அளிப்பார் நம் தேவன்.

நாம் பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஒரு வாழ்வை அனுதினமும் வாழ்வதே கர்த்தருக்கு நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை. 
 

Thursday, October 1, 2020

தேவனை ஸ்தோத்தரியுங்கள் - நாள் 1

 தானியேல்:2:20

பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

தானியேல் உன்னதத்தின் தேவனை ஸ்தோத்தரித்தான். நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தின் மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டதற்காக தேவனை ஸ்தோத்தரித்தான். 

ஞானமும், வல்லமையும் கர்த்தருடைய கரத்தில் இருந்து கிடைக்கிறது என்று தானியேல் தெரிந்து கொண்டிருந்தான். எனவே தான் கர்த்தருடைய இரக்கத்திற்காக பரலோகத்தின் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். ராக்காலத்தில் தரிசனத்தில் மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. உடனே அவன் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்தரித்து புகழ்ந்தான். 

கர்த்தருடைய கரத்தில் இருந்து அனுதினமும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுகிற நாம் அவரை ஸ்தோத்தரிக்கிறோமா ? அல்லது நன்மைகளைப்  பெற்றுக்கொண்டவுடன் கர்த்தரை மறந்து விடுகிறோமா? சிந்தியுங்கள். 

நீங்கள் கர்த்தரின் கரத்தில் இருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பட்டியலிடுங்கள். கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பீர்கள்.