Tuesday, September 1, 2020

சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்கிற கர்த்தர்

சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்கிற கர்த்தர் 

பிரசங்கி :3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

 எந்த ஒரு காரியத்தையும் செய்ய தேவன் குறித்திருக்கும் காலத்தை உணர்த்தும் வசனம் இது. 

வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் விரும்பும் வண்ணம் நம் விஷயங்களை நம் திட்டங்களை செயல்படுத்த கற்பனை செய்கிறோம். நம் எதிர் காலத்திற்கு இது தான் சிறந்தது என்று நாம் சில எண்ணங்களை , திட்டங்களை வகுக்கிறோம். 

ஆனால் தேவன் நியமித்திருக்கும் நேரம், திட்டம் நம் எண்ணங்களில் இருந்து, நாம் சரி என்று நினைத்திருக்கும் நேரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். 

ஏசாயா :55:8, 9

என் நினைவுகள் , உங்கள் நினைவுகள் அல்ல ;உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

 பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்த்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும் உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. 

பிரசங்கி :11:5

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

எல்லாவற்றையும் படைத்த தேவனின் திட்டங்களை அவர் செயல் படும் விதங்களை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. 

பல சூழ்நிலைகளில் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருப்பதை போன்று தோன்றலாம். சொந்த பெலத்தால் எல்லாவற்றையும் செய்து முடித்து விடலாம் என்று தோன்றலாம். அனால் உண்மை அதுவல்ல. 

எல்லாம் தேவனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. எந்த ஒரு செயலையும் நாம் அவரால் தான் செயல் படுத்துகிறோம். நம் ஒவ்வொரு அசைவும் தேவனாலேயே நடக்கிறது. 

பல நேரங்களில் நம் இதயம் உலக எண்ணங்களாலும், உலக கவலைகளாலும், நிறைந்து இருக்கின்ற காரணத்தினால் நம் வாழ்க்கையில் செயல் படும் கர்த்தரின் காரத்தையோ, அவரின் செயல்பாடுகளையோ பார்க்க நமக்கு நேரமில்லாமல் போகிறது. 

நீங்கள் குடும்ப சூழ்நிலைகளினால் பொறுமை இழந்து காணப்படலாம், பணி இடங்களில் பதவி உயர்வு கிடைக்காததினால் ஏமாற்றம் அடைந்து இருக்கலாம், நம் பிள்ளைகள் நாம் ஆசைப்படுகிற படி நடக்காமல் இருக்கலாம், நாம் நினைத்தபடி விஷயங்கள் நடைபெறாமல் போயிருக்கலாம். பிரசங்கி:3:11 ஐ நினைவு கூறுங்கள்.

 நாம் செய்ய வேண்டியது என்ன ?

எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை துதிப்பதும், அவர் பேரில் நம்பிக்கை வைத்து விசுவாசத்தில் வளர்வதுமே நம் கடமையாக இருக்க வேண்டும். யோபு சோதனைகளையும் , கஷ்டங்களையும் அனுபவித்த போதும் கர்த்தரை கேள்வி கேட்க துணியவில்லை. 

தமக்காக தேவன் ஒரு திட்டத்தையும், அதை சரியான நேரத்தில் செயல்படுத்துவர் என்பதையும் அறிந்திருந்தான். 

நீங்கள் இன்று எந்த சூழ்நிலையில் இருந்தாலும், ஏதோ ஒரு நன்மையை தேவனுடைய கரத்தில் இருந்து பெற காத்திருந்தாலும் , எனக்கு மட்டும் ஏன் எதுவும் சரியாக நடக்கவில்லை, எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம் என்று கவலையோடிருந்தாலும், மனம் தளராதிருங்கள். கடவுளின் சரியான நேரத்திற்கு காத்திருப்பது வீணாய்ப்போகாது . கர்த்தரின் பாதத்தில் காத்திருப்பது எப்போதும் நமக்கு நன்மையே பயக்கும். அதை ஒரு போதும் மறந்து போகாதிருங்கள். 

நினைவில் கொள்ளுங்கள்:

 கர்த்தர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்ய வல்லவர்.