Sunday, March 6, 2022

கண்கள் திறக்கப்பட அழைக்கப்படுகிறோம்

 ஏசாயா : 42: 6

 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

நம்முடைய கண்கள் திறக்கப்பட வேண்டும் என்ற அழைப்பு இப்பொழுது நமக்கு கொடுக்கப்படுகிறது.  இருள் நிறைந்த வாழ்வில் வெளிச்சம் தர நம் தேவன் ஆயத்தமாயிருக்கிறார். அதற்காக நம் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும்.  கண்கள் என்பது நம் சரீர பிரகாரமான கண்களை அல்ல, நம் ஆவிக்குரிய கண்களைக் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கண்கள் திறக்கப்பட்டவரின் வாழ்வில் தேவன் பல நன்மைகளை வைத்திருக்கிறார்.

1)  ஆகாரின் கண்களைத் திறந்த தேவன் ஆதியாகமம் :21:19

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதரவற்ற, உதவியற்ற  நிலை. தன் குழந்தைக்கு கொடுக்க தண்ணீரற்ற நிலையில் ஆகார் நின்றிருந்தாள்.  வனாந்தரத்தில் வாய்ப்பற்ற சூழ்நிலையிலும் ஒரு நீரூற்றை தேவன் காண்பித்தார்.   தேவன் ஆகாரின் கண்களைத் திறந்தார். 

ஆண்டவர் நமக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறார்.  ஆண்டவர் நமக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் உதவிகளை நாம் உணராதிருக்கிறோம்.  ஒவ்வொரு நிமிடமும் நமக்கு பலத்த துருகமும், கேடகமுமாய் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறார்.  

2) பிலேயாமின் கண்களைத் திறந்த தேவன் - எண்ணாகமம் : 24: 3,4 

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

பிலேயாம் இஸ்ரவேலரை சபிக்கப் புறப்பட்டான். அவனுடைய கண்கள் திறக்கப்பட்ட போது அவன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்தான்.  கண்கள் திறக்கப்பட்டபின் தேவ எச்சரிப்பைக் கண்டு கொண்டான்.  தவறை உணர்ந்து கொள்ளுகிறான். 

பொருளாசையினால் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க ஒத்துக்கொண்டான்.  வழி தப்பித் போகிற நமக்கு சரியான பாதையை தேவன் காட்டுவார்.  தேவ சித்தத்தை அறிந்து கொள்ளச் செய்வார்.  

3)  வேலைக்காரன் கண்களைத் திறந்த ஆண்டவர் - 2 ராஜாக்கள் :6:17

அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

எலிசாவை அழிக்கும் படி சீரியாவின் ராஜா ராணுவத்தை அனுப்புகிறான்.  அதனைப் பார்த்து பயந்த எலிசாவின் வேலைக்காரன் நாம் என்ன செய்வோம் என்று சொல்கிறான்.  அப்பொழுது எலிசா தேவை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.  தேவன் அவன் கண்களைத் திறந்தார்.  கண்கள் திறக்கப்பட்ட போது எலிசாவைச் சுற்றி அக்கினி மயமான குதிரைகள், ரதங்கள் சூழ்ந்திருக்கிறதைக் கண்டார்.  

வந்த ராணுவத்திற்கு கண்மயக்கம் உண்டாகும் படி தேவன் செய்தார். நம் கண்கள் திறக்கப்பட்டால் நாம் ஆண்டவரின் பாதுகாப்பை உணர முடியும்.  உன்னதமான பாதுகாவலை நாம் காண முடியும்.  

நம் சரீரக் கண்களால் காணக்கூடியக் காட்சிகள் போலியானதாகவும், மாய்மாலமானதாகவும் காணப்படுகிறது.  நம் ஆவிக்குரிய கண்கள் திறக்க தேவனை நோக்கிக் கெஞ்சுவோம்.  அப்பொழுது தேவன் நம்மை ஒன்றுமில்லாத சூழலில் வழி நடத்திச் செல்வதைக் காண முடியும், தேவனின் எச்சரிப்பை உணர்ந்து கொள்ள முடியும், அவரின் உன்னத பாதுகாப்பின் கீழ் இருப்பதை உணர முடியும்.