Sunday, January 31, 2021

கர்த்தர் என் மேய்ப்பர்

 


சங்கீதம்:23:1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 

தேவைகளை சந்திக்கும் கர்த்தர்.

ஒருமேய்ப்பன் தன ஆடுகளுக்கு தாகமாக இருந்தால் ஏற்ற நேரத்தில் தண்ணீர் காட்டி, நோயில் இருந்தால் அதற்கு வைத்தியம் பார்த்து, வழி தவறி செல்லும் போது சரியான பாதையை காட்டி, அதனை வேட்டையாட வரும் மற்ற மிருகங்களிடமிருந்து பாதுகாக்கிறான்.

அதுபோல கர்த்தர் என் மேய்ப்பர் என்று நாம் தைரியமாக சொல்லலாம்.

1.      அவர் நமக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் தருவார். இதுஒரு மனிதனின் அடிப்படை தேவை.

2.      நம்ஒவ்வொரு அடியிலும் நம்மை வழி நடத்துவார், ஆறுதலளிப்பர்,  பாதுகாப்பார்,  வழிகாட்டுவார். இன்பத்திலும் துன்பத்திலும் நம்மோடு இருப்பர்.

3.      அவர் ஒரு மேய்ப்பனைப் போல நம்மை விட்டு விலகாமல் நம்மை கைவிடாமல் நம் தோழராக எப்போதும் நம்முடனே இருப்பார் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

தாழ்ச்சியடைந்துபோகாமல்காக்கும்கர்த்தர்.

கர்த்தரைமேய்ப்பராக ஏற்றுக் கொண்டவருக்கு எந்த விதத்திலும் தாழ்ச்சி அல்லது குறைவு ஏற்படுவதில்லை. 

·         இஸ்ரவேல்புத்திரர் 40 வருடம் வனாந்திர வழியாய் கர்த்தர் நடத்தி வந்த போது அவர்களுக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை.

o   உபாகமம்:2:7 - உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பதுவருஷமும் உன்தேவனாகிய கர்த்தர் உன்னோடேஇருந்தார்; உனக்கு ஒன்றும்குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.

o   நமக்கு என்ன தேவை என்பதை கர்த்தர் நியமித்து வைத்திருக்கிறார். அந்தக் காரியங்களில்,  பொருட்களில்நமக்கு எந்த குறைவும் ஏற்படாது.

 

சிலநேரங்களில் நாம் விரும்புகிற வேலை படிப்பு தொழில் உடை வாழ்க்கை நமக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஏன் தெரியுமா?

            நாம் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினால் நமக்கு சித்திக்கவில்லை என்று வேதம் கூறுகிறது. 

யாக்கோபு:4:2,3

நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.

எனவேநம் குறைவுகளை நிறைவாக்கும் படி நாம் தேவனிடம் விண்ணப்பம் பண்ண வேண்டும்.

ஆனாலும்நம் சொந்த விருப்பங்களை நிறைவேற்றும்படி பண்ணுகிற விண்ணப்பங்கள் தேவனுக்கு தகாததாய் காணப்பட்டால் அதற்கு தேவன் பதில் தர மாட்டார். அச்சூழலிலும் நாம் நம் மேய்ப்பரை நம்ப வேண்டும்.  அவ்வாறுநம்பும் போது

·         கர்த்தர்அதை சரியான நேரத்தில் நமக்கு தருவார்.

·         அல்லதுஅது நமக்கு தேவை இல்லை என்பதை நமக்கு உணர்த்துவார்.

கர்த்தர்என் மேய்ப்பர் என்பதை உறுதியாக நம்புங்கள். நமக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார். இந்த நம்பிக்கை விசுவாசம் நம்மை திருப்தி அடைய செய்யும். நாம் கேட்டால் எல்லாம் கடவுள் தருவார் என்பதை விட, நமக்கு சிறந்ததை, சரியானநேரத்தில், தேவையான அளவு  தருவார்என்ற விசுவாசத்தோடு கர்த்தராகிய மேய்ப்பனை நம்புவோம். ஒரு போதும் தாழ்ச்சியடைந்து போக மாட்டோம்.

சிந்திக்க

v  கர்த்தர் உங்கள் எந்தெந்த தேவைகளை சந்தித்தார்?

v  எந்த காரியங்களில் நீங்கள் தாழ்ச்சி அடையாமல் பாதுகாத்தார்?

சிந்தித்து பட்டியலிடுங்கள்.

Friday, January 22, 2021

எழும்பிப் பிரகாசிக்கச் செய்யும் கர்த்தர்

 


ஏசாயா 60 :1 , 2

எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

"எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது" என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுவதன் மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கிறார்.  சீர்கெட்டு அழிந்துக் கிடந்த தேசம் சீரமைக்கப்பட்டு மறுபடியும் நிலை நிறுத்தப்படும் என்ற செய்தியைக் கூறுகிறார். கர்த்தரின் ஆட்சி எல்லாவற்றிலும் மேலோங்கியிருக்கும் காலத்தை நம் கண் முன் காட்டுகிறது.

பல வீடுகளில் காலையில் எழும்பி உன் வேலையை  செய் ; காலையில் எழும்பி படி; என்ற வார்த்தைகள் தினமும் தொனித்துக் கொண்டிருக்கும்.  காலையில் உற்சாகமூட்டும் வார்த்தைகளாக இவை காணப்படுகிறது.  விசுவாசிகளும் எழுந்து பிரகாசிக்க அழைக்கப்படுகிறார்கள்.  கர்த்தர் இருந்து கிடக்கும் நம் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்ய முடியும்.  அத்தகைய தேவன் நம்மோடு இருப்பதால் இருளில் ஜனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நம்மால்  முடிந்த காரியங்களை செய்ய வேண்டும்.  பாவிகளையும் பிரகாசிக்கச் செய்ய தேவனால் முடியும். 

நாம் எப்படி பிரகாசிக்க முடியும்பாவத்தின் இருளில் வாழ்ந்த நாம் ஆவிக்குரிய மீட்சியை மிஷனெரிகள் வாயிலாக அடைந்திருக்கிறோம். மகிழ்ச்சியான நம்பிக்கையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  கர்த்தருடைய மகிமையான வருகையை பேரானந்தத்தோடு ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

எழும்பி பிரகாசி என்பது கர்த்தர் நமக்குக் கொடுக்கும் ஒரு கட்டளை.  சுவிசேஷத்தை நாம் ஏற்றுக்கொள்ளும் போது நாம் உயிர்பிக்கப்படுகிறோம். 

நாம் ஏன் எழும்பி பிரகாசிக்க வேண்டும்மத்தேயு :5 :14 -16  விளக்குத் தண்டின் மேல் வைக்கப்பட்ட விளக்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும்.  அதே போல் நாம் கிறிஸ்துவை நம் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு வாழும் போது நாமும் பிரகாசிக்க முடியும்.  நம் நற்செயல்களை பிறர் காணும் போதும், பிற மதத்தினர் காணும் போதும் பரலோகத்தின் பிதாவும் மகிமைப்படுவார்.  அதன் மூலம் அவிசுவாசிகளும் கர்த்தரண்டை கிட்டிச் சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

ஒளியாகிய கிறிஸ்து நம் மூலமாக செயல்படுவதால் நம் வாழ்வு பிரகாசிக்கிறது.  உலகத்தரிலிருந்து பிரிக்கப்பட்டதான வாழ்வு வாழ்கிறோம்.  கர்த்தருக்குப் பிரியமான, அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலம் நாம் எழும்பிப் பிரகாசிக்க கர்த்தர் உதவுகிறார்.  கர்த்தருக்குள் மேலும் மேலும் வேரூன்றுவோம்.  இன்னும் மென்மேலும் கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிப்பார்.

யோவான் :12 :46

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

கொலோசெயர்:1 :13

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நீர் எங்களைப் பிரகாசிப்பிக்கிற தேவனாய் இருப்பதற்காய் நன்றி.  இருளில் கிடந்த எங்களைத் தூக்கியெடுத்து வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாற்றியதற்காய் நன்றி.  நாங்கள் மட்டுமல்ல, எங்கள் நற்கிரியைகளைப் பார்த்து பிறரும் உம்மைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ள அவர்கள் வாழ்வும் பிரகாசிக்கத்தக்க கிருபை புரியும்.  எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் உமக்காக எழும்பிப் பிரகாசிக்க உதவி செய்யும்.