Monday, May 31, 2021

நம்மை ஆதரிக்கிறக் கர்த்தர் / The Lord who sustain us

 சங்கீதம் 55 தாவீதின் புலம்பலாக காணப்படுகிறது. இந்த சங்கீதத்தின் மத்திய பாகத்திற்கு வரும் போது தன் நண்பனாலேயே தனக்கு துரோகம் இழைக்கப்பட்டது பற்றிக் கூறுகிறார்.    அதனால் அவர் அமைதியற்றவராய், புலம்புகிறார். எதிரிகளால் அச்சுறுத்தப்பட்டு தலைமறைவாக வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது.  தாவீது மிகுந்த துக்கத்துடனும், வேதனையுடனும், துயரத்துடனும் இருந்த சூழலில் இந்த சங்கீதத்தை எழுதினார்.

நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் தாவீது என்ன செய்தார்? இன்னொரு மனுஷனை நாடி ஓடினாரா? பெருகிக்கொண்டிருந்த எதிரிகளினால் கஷ்டங்களும் அவநம்பிக்கையும் சுற்றி  நேரத்தில் தாவீது செய்த காரியம் என்ன?

தாவீது தன் கண்களை கர்த்தர் பக்கம் திருப்பினார்.  தன் பாரங்களை கர்த்தர் மேல் வைத்தால் அவர் தன்னுடைய எல்லா கஷ்டங்களிலும் தனக்கு ஆதரவாய் இருப்பார் என்று நம்பிக்கை கொண்டார்.   ஏனென்றால் அவர் நீதிமான்களை ஒருபோதும் கைவிடமாட்டார். 

இன்று நாமும் பலவித பயங்களினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறோம்.  பரவிக் கொண்டிருக்கும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயம், பொருளாதார நிலை குறித்த பயம் எல்லாம் இன்று மனிதனைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறது.  தாவீதின் இந்த சங்கீத வசனம்  ஒரு ஆறுதலாய் நமக்கு அருளப்படுகிறது. 

என்ன பாரங்கள்  உங்களை அமிழ்த்திக்கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் கர்த்தர் மேல் வைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார். 

கர்த்தர் நம்மை ஆதரிக்க நாம் செய்ய வேண்டிய ஒரு காரியமும் உண்டு.  எல்லா பாரங்களையும் கர்த்தர் மேல்  விட்டு அவர் நமக்காக எல்லாவற்றையும் நம்முடைய நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையையும் அவர் மீது வைக்க வேண்டும். 

வேதாகமம் முழுவதும் பயப்படாதிருங்கள் என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது. நம் தேவன் நம் மீது அக்கறை உள்ளவர். நம் சந்தோஷங்களை விரும்புகிறார்.  எனவே கர்த்தர் மேல் உங்கள் பாரங்களை வைத்து விடுங்கள் அவர் உங்களை ஆதரிப்பார். 

Psalm 55 is seen as the lamentation of David.In the middle part of this psalm he tells of being betrayed by his friend.  So he is restless and laments. He was threatened by the enemy and had to live in hiding.  David wrote this psalm when he was in great sorrow and pain.

What did David do when he lost hope? Did you run after another man? What did David do in the midst of suffering and distrust by his growing enemies?

David turned his eyes to the Lord. He believed that if he placed his burdens upon the living God, He would support him in all his difficulties.  Because he will never forsake the righteous.

Today we too are surrounded by various fears. Fear of being infected by a contagious disease, fear of the future of the children, fear of the economic situation are all destroying the peace of the people. This psalm of David is given to us as a consolation.

Learn to put everything on the Lord no matter what burdens are drowning you. He will sustain you.

There is one thing we must do for the Lord to support us. We must leave all burdens on the Lord and put our trust in Him that He will finish everything for us for our good and for His glory.

The word “do not be afraid” is repeated throughout the Bible. Our God cares for us. He wants us to he happy. So put your burdens on the Lord and He will sustain you.

Wednesday, May 26, 2021

சமாதானத்தை அளிக்கும் இயேசு / Jesus who gives peace

 

அமைதியின்மை பெருகிக்கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  உலகில் காணப்படும் பெருந்தொற்று பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து தனிமனித வாழ்வை சிதறடித்து வருகின்றது.  தினமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவிற்கு பலியாகிக்கொண்டிருக்கின்றன. இதனால் பல குடும்பங்கள் சமாதானமிழந்து துயரத்தில் இருக்கின்றன.

இந்த அமைதியின்மைக்கு மத்தியில் யேசுநாதர் தம் சீஷர்களுக்கு அளித்த வாக்குறுதி ஆறுதல் அளிக்கிறதாய் இருக்கிறது.  யோவான் 14:27 கூறுகிறது - சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.  நம் இதயங்களில் அமைதி என்பது மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.

வாழ்வில் சமாதானமாய் இருப்பது என்றால் எந்த பிரச்சனைகளும் இல்லாத ஒரு சூழ்நிலையாகப் பலர் கருதுகிறார்கள்.  ஆனால் இயேசு இங்கு குறிப்பிடுகிற சமாதானம் அதுவல்ல.  எந்த பிரச்சனைகள், சோர்புகள், நோய்கள் இருந்தாலும் அதன் மத்தியிலும் நம் இருதயத்தில் நிலவும் அமைதியையே இங்கு குறிப்பிடுகிறார்.  

கடுமையான பிரச்சனைகளின் மத்தியிலும் அதனை அமைதியோடு சகித்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை தேவன் தருகிறார். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்ற நிம்மதி கிடைக்கிறது.  அதனால் பயமும் கவலையும் நம்மை விட்டு நீங்கி ஒரு சமாதானம் நம்மை ஆட்கொள்ளும்.

இந்த மன  அமைதியை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது? எல்லா சூழ்நிலைகளையும் தேவனிடம் ஜெபத்தின் மூலம் ஒப்படையுங்கள். பிலிப்பியர் :4:6,7 வசனங்கள் இவ்வாறு கூறுகிறது.  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.  அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.   

எனவே எந்த பிரச்னைகள், வந்தாலும் கர்த்தரின் கரத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு அமைதியாக அவர் பாதத்தில் அமர்ந்திருங்கள். அவர் நம்மை  சூழ்நிலைகளிலும் தாங்கி  நடத்துவார்.  நம் வாழ்வின் இறுதி வரை அந்த தெய்வீக சமாதானத்தை நமக்குத் தருவார். உலகமும் உலகப் பொருள்களும் வழங்க முடியாத சமாதானம் நம்மை சூழ்ந்து கொள்ளும்.  


We live in a world where unrest is rampant.  The great epidemic in the world is disrupting economic stability and disrupting individual life.  Thousands of lives are being sacrificed to the corona every day. Thus many families are distressed and distressed.

In the midst of this unrest, Jesus' promise to his disciples is comforting. John:14:27 says :Peace I Leave With You; My Peace I Give You. I Do Not Give To You As The World Gives. Do Not Let Your Hearts Be Troubled And Do Not Be Afraid.  Peace in our hearts is one of the most needed.

Peace in life is considered by many to be a situation where there are no problems.  But that is not the peace that Jesus is referring to here. He is referring here to the peace that prevails in our hearts in the midst of any troubles, exhaustions, and illnesses.

God gives us the mindset to endure it peacefully in the midst of serious problems. We have the peace of mind that Jesus Christ is with us. So fear and anxiety will leave us and a peace will occupy us.

How do we get this peace of mind? Surrender all circumstances to God through prayer. Philippians 4: 6,7 says, Do not be anxious over anything, but in everything by prayer and supplication along with thanksgiving let your petitions be made known to God; Then the peace of God above all understanding will guard your hearts and your minds within Christ Jesus.

So whatever problems come, surrender to the hand of the Lord and sit quietly at His feet. He will sustain us in situations. He will give us that divine peace until the end of our lives. We are surrounded by peace that the world and worldly things cannot provide.

Monday, May 24, 2021

நம்மை விசாரிக்கிற கர்த்தர் /The Lord who cares for us

 

இவ்வுலகில் மனித வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் துன்பங்கள் துயரங்களினால் நிறைந்திருக்கிறது. அந்த அழுத்தங்களை, மனச்சிக்கல்களை தானே சமாளித்து வாழ முடியும் என்று மனிதராகிய நாம் பலநேரங்களில் பெருமிதம் கொள்கிறோம்.   ஆனால் வேதம் வேறுவிதமாக நமக்கு எடுத்துக் கூறுகிறது.  நம்முடைய அன்றாடப் பிரச்சனைகளை நம்மால் சமாளிக்க முடியாது என்று வேதம் கூறுகிறது.  

எனவேதான் அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.  

நம்முடைய எல்லா பெலவீனங்களையும், இயலாமையையும், கவலைகளையும்  கர்த்தரிடம் ஒப்புக்கொடுக்கும்படி கட்டளை பெறுகிறோம். நம்முடைய எல்லா  பாரங்களையும் அவர் தாங்குவதாகக் நம்முடைய அன்பான தேவன் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். 

நம்முடைய குறைவுகளை மனத்தாழ்மையுடன் அவரிடம்  ஓப்படைப்பதை மட்டுமே தேவன் எதிர்பார்க்கிறார். அவர் நம்மேல் கிருபை கூர்ந்து அளிக்கும் அமைதியையும் பெற்றுக்கொள்வோம்.  அந்த கஷ்டமான பாரம் மிகுந்த சூழலிலும் அவருடைய அருள் நம்மோடிருந்ததை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நாம் நம்முடைய பாரங்களை அவர் மீது வைத்து விட்டு நம் பிரச்சனைகளுக்கு நாம் நினைக்கிற வண்ணம் பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் கர்த்தர் தம்முடைய நேரத்திலும், அவர் சித்தம் நம்முடைய வாழ்வில் நிறைவேறவும் தக்கதான பதிலைத் தான் தருவார். அது நம் வாழ்வில் நன்மைகளையும், நித்தியத்திற்கேற்ற மகிமையை நாம் பெற்றுக்கொள்ளவும் உதவும்.   எனவே எப்பொழுதும் கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து நம் பாரங்களை அவர் மீது வைப்போம். 


Human life in this world is full of problems and sufferings. As human beings, we are often proud that we can cope with those pressures and anxieties. But Scripture tells us otherwise. Scripture says that we cannot cope with our daily problems.

That is why it is said in the scriptures "Cast All Your Anxiety On Him Because He Cares For You".

We are commanded to surrender all our weaknesses, disabilities, and worries to the Lord. Our loving God has promised us that He will bear all our burdens.

God only expects us to humbly surrender our shortcomings to Him. We also receive the peace that He bestows upon us. We can know that his grace was with us even in those difficult circumstances.

We leave our burdens on Him and expect our problems to be answered as we think. But the Lord will give the right answer in His own time and in the fulfillment of His will in our lives. It will bring us benefits in our lives and help us to attain eternal glory. So let us always submit to the will of the Lord and place our burdens on Him.

Saturday, May 22, 2021

நம் கன்மலையும் பங்குமாயிருக்கிற தேவன் /God is our rock and our portion


73-ம்   சங்கீதத்தை எழுதியவர் ஆசாப்.  பாடகரான இவர் துன்மார்க்கர் வாழ்ந்து செழித்திருப்பதைப் பார்த்து மனமடிவாகிறார்.  அவர்கள் செழித்து வாழ கர்த்தர் அனுமதித்திருக்கிறார் என்ற எண்ணம் அவனுள் வந்ததினால் மகிழ்ச்சியற்றவராக மாறினார்.  ஆனால் தேவனுடைய சந்நிதிக்குள் பிரவேசித்த போது ஆசாபின் எண்ணங்கள் மாறியது. 

தன் மாம்சமும் இருதயமும் மாண்டு போனாலும் தேவன் தன் கன்மலையும், பங்குமாய் இருப்பதை தெரிந்து கொண்டார். அதை அறிக்கையும் இடுகிறார்.  தேவன் நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியின் ஆதாரமாய் இருக்கும் போதுதான் அவரைக் கன்மலையாகவும் நம் பங்காகவும் கொள்ள முடியும்.

தன் வாழ்வில் யோபு எல்லாவற்றையும் இழந்த போது கூட  "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" என்று கூறினார்.  என் தோல் முதலானவை அழுகிப்போனாலும் என்  மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்பேன் என்று தைரியமாகக் கூறினார்.(யோபு:19:25,26).

ஆபிரகாம் தேவனைத் தன் பகுதியாகக் கருதினார்.  சிறைபிடிக்கப்பட்ட சோதோமின் மக்களை ஆபிரகாம் மீட்க உதவின போது சோதோமின் ராஜா கொடுத்த வெகுமதிகளை ஏற்க ஆபிரகாம் மறுத்துவிட்டான். தன்னுடன் வந்த புருஷருடைய பங்கு மாத்திரம் வரவேண்டும் என்றுக் கூறிவிட்டான்.  தன்னுடைய பங்கு உன்னதமான தேவனாகிய கர்த்தர் என்று  தன் கையை உயர்த்தினான் . 

நாம் சரீர பிரகாரமாக மாண்டு  போகக் கூடிய சூழ்நிலை வந்தாலும் தேவனை நம் கன்மலையாகவும், பங்காகவும் கொள்வோம். எல்லா விதத்திலும் தோல்வியடைந்து, சோர்வடைந்து, உதவியற்றவர்களாக, நம்பிக்கை இழந்து காணப்பட்டாலும் கர்த்தர் உங்கள் கன்மலையாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Psalm 73 was written by Asaph. The singer is heartbroken to see the wicked living and prospering. He became unhappy because the thought came to him that the Lord had allowed them to prosper. But Asaph's thoughts changed when he entered the presence of God.

Even though his flesh and heart were destroyed, he knew that God was his rock and share. Only when God is the source of happiness in our lives can we take Him as the rock and our share.

Even when Job lost everything in his life he said, "My Savior is alive." He boldly said that he would see God from my flesh, even though my skin was rotten (Job 19: 25,26).

Abraham considered God as his part. Abraham refused to accept the rewards given by the king of Sodom when he helped the people of Sodom to bring them back from captivity. He said that only the portion of the man who came with him should come. He raised his hand and showed that his share was the Lord God Almighty.

We will take God as our rock and portion, even when we are in a situation where we can physically perish. Remember that the Lord is your rock, even though you are found to be failing, tired, helpless, and hopeless in every way.

Friday, May 21, 2021

இளைப்பாறுதல் தரும் கர்த்தர்


 வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் நோய்கள் இவைகளினால் சோர்ந்து போய்  இருக்கலாம்.  பொருளாதார நெருக்கடிகள் நம்மை  மனமடிவாக்கலாம்.  ஆனாலும் சோர்ந்து  போக வேண்டாம். நமக்கு இளைப்பாறுதல் தரும் கர்த்தர் நமக்கு உண்டு. அவரைச் சார்ந்து வாழ்வோம்.  எல்லா பிரச்சனைகள் மத்தியிலும் மனஅமைதியை நமக்கு கர்த்தர் தருவார். கலங்காதீர்கள். 

நாம் களைத்திருக்கும் போது சிலுவை நிழலில்  தஞ்சம் புகுவோம். கர்த்தர் நமக்கு இளைப்பாறுதல் தந்து சுகமாய் நம்மைத் தங்கப்பண்ணுவார். 

சங்கீதம்:116:7
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு  நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

Wednesday, May 12, 2021

வேதாகமப் பெண் அன்னாளின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன?

 

மனிதனுடைய வாழ்க்கை  எல்லா  நாளும்  ஓன்று  போல்  இருப்பதில்லை. இன்பங்களும்  துன்பங்களும்  மாறி  மாறி  வரும். இன்பங்களை  இறைவன்  நமக்கு  கொடுக்கும்  போது ஏன்  இறைவா  எனக்கு  இன்பத்தைக்  கொடுத்தாய்  என்று  நாம்  கேட்பதில்லை. ஆனால்  ஏதேனும்  ஒரு  சிறு  துன்பம்  வரும்போது எனக்கு  ஏன்  இந்த  சோதனை  என்று  இறைவனிடம்  கேட்கிறோம்.

துன்பங்கள்  ஏன்  வருகிறது?  கஷ்டங்கள், துயரங்கள், இழப்புகளினால் வரும்  சோகங்கள்  ஆகியவை  ஏன்  வருகின்றன?. நம்முடைய  பாவங்களின் விளைவாகவா?  நம்முடைய  ஆன்மீக  வாழ்வில்  ஏற்பட்ட  குறைவினாலா?

கர்த்தருடைய  சித்தப்படிதான்  இந்த  துன்பங்கள்  நமக்கு  வருகின்றனவா?  துன்பங்களை  அனுமதிப்பதன்  மூலம்  கர்த்தர்  என்ன  செய்ய  விரும்புகிறார்? கஷ்டங்கள்  வரும்போது  தான்  நாம்  நம்  தேவனை  அதிகமானது  தேடுகிறோம். அவரைக்  கிட்டிச்  சேர்கிறோம்.  கர்த்தரை  விட்டு  பின்வாங்கியிருக்கிற  பலரின்  வாழ்வில்  இத்தகு  கஷ்டங்களும்  பாடுகளும்  கர்த்தரின்  பக்கமாய்த்  திரும்புவதற்கான  ஒரு  காரணமாக  இருக்கலாம் . ஆனாலும்  பாடுகள், சோதனைகள்  வரும்  போது  விசுவாச  வாழ்வை  விட்டு  பின்வாங்கிப்  போவோரும்  உண்டு.

சில  வீடுகளில் பிள்ளைகளின் கீழ்ப்படியாமையினால்  பிரச்சனைகள் உருவாகிறது. குடும்பத் தலைவர்களின்  குடிப்பழக்கத்தினால்  பிரச்சனைகள் உருவாகிறது. இன்னும்  சிலருக்கு  வேலையின்மை ஒரு  துயரத்தைத் தருகிறது. இன்னும்  பலர்  குழந்தை  இன்மையினால்  அவதிப்படுகிறார்கள். அப்படியொரு  துயரத்திற்குள்ளாகக்  கடந்து  சென்றவர்கள்  தான்  அன்னாள் என்ற பெண்மணி. தீர்க்கத்தரிசியான  சாமுவேலின்  தாயார்.

குடும்பப்  பின்னணி

அன்னாளின் குடும்பம்  எப்பிராயீம் மலைத் தேசத்திலே  வாழ்ந்த  ஒரு  குடும்பம். பிற்காலத்தில்  நடந்த  சம்பவங்களின்படிப்பார்த்தால்  இவர்கள்  ஒரு  லேவி  குடும்பத்தார். ஏனெனில்  சாமுவேல்  ஆசாரியனாகிறான். இஸ்ரவேலின்  கோத்திரங்களுக்குள்ளே  லேவிக் கோத்திரம்  தான்  ஆசாரிய  ஊழியம்  செய்ய  அனுமதிக்கப்பட்டு  இருந்தனர்.  அந்த  கோத்திரத்தில்  எல்க்கானா  என்ற  மனிதன்  எப்பிராயீம்  ஊரில்  அன்னாள், பெனின்னாள்  என்ற  தன் இரண்டு  மனைவிகளோடு  வாழ்ந்து  வருகிறான்.

அன்னாளுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் பெனின்னாளுக்கோ குழந்தைகள் இருந்தது.  அது ஒரு பெரிய குறையாகவே இருந்தது. சுற்றத்தாரின் நிந்தனையான பேச்சுக்களின் மத்தியில் அன்னாள் வாழ்ந்து வந்தாள்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வாக்குப்பண்ணி கொடுத்த ஆசீர்வாதங்களில் முக்கியமானதொரு ஆசீர்வாதம் குழந்தை செல்வங்கள். அந்த ஆசீர்வாதம் அன்னாளுக்கு அருளப்படவில்லை.

அன்னாளின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருந்திருக்கும்?

குழந்தைகள் இல்லை என்றாலும் எல்க்கானா பெனின்னாளை விட அன்னாளை அதிகமாக நேசித்தான்.ஆனாலும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு இருந்திருப்பாள். சக்களத்தியினால் அதிக மன வேதனை அடைந்திருப்பாள். எல்க்கானாவின் ஆதரவும் அன்பும் அன்னாளுக்கு கிடைத்தாலும் அவள் அந்த சூழ்நிலையில் சந்தோஷமாய் வாழ்ந்திருப்பாளா என்பது சந்தேகமே. அது சந்தோஷம் நிரம்பிய வீடாக இருந்திருக்கவில்லை என்பது உறுதி.

குடும்ப  வழக்கம்

சூழ்நிலைகளினால் எல்கானாவின் வீட்டில் நிம்மதி குறைந்திருந்தாலும் அவன் தெய்வ பயத்தோடு வாழ்ந்து வந்தான் என்பது நமக்கு தெரிகிறது. இஸ்ரவேலின் தேவன் மேல் நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதும் தெரிகிறது.

எல்க்கானா தன் குடும்பத்தோடு வருஷந்தோறும் சீலோவிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்குப் போய் பலியிட்டுத் தொழுது கொள்ளுவான்.அவர்கள் வாழ்ந்த ராமா எருசலேமுக்கு வடக்கே பதினைந்து மைல் தொலைவிலும், சீலோ ராமாவிற்கு வடக்கே பதினைந்து மைல் தொலைவிலும் இருந்தது. எனவே அவர்கள் பதினைந்து மைல் பிரயாணம் பண்ணி சீலோவிற்குப் போனார்கள்.எல்லாரும் சந்தோஷமாய்ப் போகக்கூடிய இந்தப் பிரயாணம் அன்னாளுக்கு மனவேதனையை கொண்டு வந்தது.

ஏனென்றால் அவளுடைய சக்களத்தியாகிய பெனின்னாள் அவள் துக்கப்படும்படியாக விசனப்படுத்துவாள் (I சாமுவேல் : 1:6). எவ்வளவு தான் அன்பாக எல்க்கானா இருந்தாலும் பெனின்னாளின் மூலம் வருகின்றக் கஷ்டத்தைத் தடுக்க அவனால் முடியவில்லை.

கர்த்தர் தொழுது கொள்ள வந்த இடத்தில் கூட அன்னாள் அழுது கொண்டிருக்கும் படியான சூழல் ஏற்பட்டது. எல்க்கானா எவ்வளவுதான் தேற்றினாலும் (1 சாமுவேல் 1:8) அவளால் குழந்தை இன்மையினால் அவள் படும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளக் கூடாதிருந்தது.

விண்ணப்பம் பண்ணின அன்னாள்

பல நேரங்களில் எல்லா சூழ்நிலைகளிலும் கணவனால் ஆறுதல் கிடைத்து விடாது. நாம் சொல்லுகின்ற எல்லா காரியங்களையும் அவர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம்.  நமக்கு பெரிய பிரச்சனையாய் தோன்றுகிற விஷயங்கள் அவருக்கு சாதாரணமானதாகத் தோன்றலாம்.  இந்த சிந்தனை தான் எல்க்கானாவுக்கும் ஏற்பட்டது. தனக்கு பெனின்னாளின் மூலம் குழந்தைகள் இருந்ததினால், அந்நாளுக்கு பிள்ளைகள் இல்லை என்ற விஷயம் அவனைப் பெரிதும் பாதிக்கவில்லை.  எனவே தான் அன்னாளிடம் பத்து குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகம் அல்லவா என்றுக் கூறினான். I சாமுவேல்:1:8.

இப்படிப்பட்ட சமயங்களில் கணவனால் கிடைக்காத ஆறுதல் நம் தோழிகளிடம் இருந்து கிடைக்கலாம். எனவே ஒரு பெண்ணிற்கு கிறிஸ்துவை அறிந்த தோழிகள் இருப்பது தன் மனக்கிலேசங்களை பகிர்ந்து கொள்ள இன்னொரு துணையாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நமக்கு உற்ற துணையாக இருக்கிறார். எனவே எந்த சூழ்நிலையிலும் நம்மை ஆறுதல் படுத்துகிற தேவன் நமக்குண்டு என்பதை மறந்து போகாதேயுங்கள். பிரச்சனைகளைக்  கண்டு மனம் மடிந்து போக வேண்டாம்.

அன்னாளும் மனுஷனைத் தேடி ஓடவில்லை. தேவனுடைய சமூகத்தை நோக்கி ஓடினாள்.  அவள் மனங்கசந்து அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். I சாமுவேல்:1:10 - அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

வாழ்க்கையில் கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் வரும் போது மனிதர்களிடம்  செல்லாதீர்கள். மனங்கசந்து உங்கள் விண்ணப்பங்களைத் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பொருத்தனைப் பண்ணின அன்னாள்.

அன்னாள் விண்ணப்பம் பண்ணினதோடு நின்று விடவில்லை.  சேனைகளின் கர்த்தரை நோக்கி பொருத்தனைப் பண்ணுகிறாள் என்று பார்க்கிறோம் - I சாமுவேல்:1:11. 

பொருத்தனையின் துவக்கத்தில் சேனைகளின் கர்த்தாவே என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார் அன்னாள்.  1 சாமுவேல்:1:3 - ம் வசனத்தில் இந்த வார்த்தை வருகிறது.  வேதத்தில் நியாயாதிபதிகள் புத்தகம் வரை இந்த வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.  சங்கீதத்திலும் அரிதாகவே காணப்படுகிறது.  இஸ்ரவேல் மக்கள் துன்பமான நேரங்கள் மற்றும் தோல்வியடைந்த நேரங்களின் போது கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடும் சமயங்களில் இந்த வார்த்தை சங்கீதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அன்னாளும் தன் துன்பமான நேரத்தில் சேனைகளின் கர்த்தாவே என்ற வார்த்தையின் வழியாக கர்த்தரை உதவி செய்யுமாறு அழைக்கிறார்.  ஏனெனில், அன்னாள்

·         சஞ்சலப்பட்ட மனநிலையில் இருந்தாள் - வசனம் 8 .

·         மனங்கசந்துக் காணப்பட்டாள் - வசனம் 10 .

·         சிறுமை அடைந்திருந்தாள் - வசனம் 11 .

·         கடவுள் தன்னை மறந்து விட்டார் என்று நினைத்தாள் - வசனம் 11 .

·         மனக்கிலேசமுள்ளவளாய் இருந்தாள் - வசனம் 15 .

·         மிகுதியான கிலேசமும், விசாரமும் உள்ளவளாய் இருந்தாள் - வசனம் 16 .

1 சாமுவேல் முதலாம் அதிகாரத்தில் உள்ள இந்த வசனங்களை வாசித்துப் பாருங்கள்.ஒரு சமாதானமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள் அன்னாள்.

இந்த சூழ்நிலையில் அவள் கர்த்தருடைய சந்நிதியில் போய் தன் இருதயத்தை ஊற்றினாள் - 1 சாமுவேல்:1 :15 . ஊற்றினாள் என்று சொல்லும் போது உள்ளம் குமுறி இருப்பாள் எனலாம். பெனின்னாளை ஆசீர்வதித்தீரே என்னை ஏன் ஆசீர்வதிக்கவில்லை? என்னை ஏன் சிறுமைப்படுத்துகிறீர்? என்னை மறந்து விட்டீரோ என்று பல கேள்விகளைக் கர்த்தரிடம் கேட்டிருப்பாள்.

நம் மனதின் உணர்ச்சிகளைத் தேவனிடம் சொல்லுவதில் தவறேதும் இல்லை. பல சங்கீதங்களில் தாவீது பயத்துடனும், அவநம்பிக்கையுடனும் இருந்த சூழ்நிலைகளைத் தேவனிடம் நேரடியாகச் சொல்லும் வசனங்களைக் காண்கிறோம்.  ஆனாலும் அச்சூழலில் இருந்து தேவன் தன்னை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையின் அறிக்கையையும் செய்வார்.  யோபுவும் அதே போல தன் மனதின் உணர்ச்சிகளைத் தேவனிடம் சொல்லுவதை யோபுவின் புஸ்தகத்தில் காண்கிறோம்.  சங்கீதம் 13 அவ்வாறான சங்கீதங்களில் ஒன்று. 

அன்னாளின் இந்த சூழ்நிலையில் இன்றும் அநேகப் பெண்கள் கடந்து வருகிறார்கள்.  சமுதாயமும் குழந்தை இல்லாதவர்களை ஏளனப்படுத்தி, மட்டம் தட்டுகிறார்கள்.  மலடி என்று பட்டப்பெயர் கொடுத்து வேதனைக்குள்ளாக்குகிறார்கள். இந்த இழிவான செயலைக் கிறிஸ்துவை அறிந்த நாம் ஒருபோதும் செய்ய முற்பட வேண்டாம்.

நீங்கள் சிறுமை அடைந்து கொண்டிருக்கிறீர்களா?  கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள்.

அன்னாள் கர்த்தரோடு தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று போராடியது எதற்காக?

·         தன் மகிழ்ச்சிக்காக

·         தன் கணவரை மகிழ்விக்க

·         தன்னை நிந்தித்த பெனின்னாள் மற்றும் சுற்றத்தாரின் வாயை அடைப்பதற்காக

இந்த நோக்கங்கள் அனைத்தும் மனிதனின் சுய நலம் சார்ந்தவை. இந்த எண்ணங்கள் தவறானது என்றும் சொல்ல முடியாது.

நம் வாழ்க்கையிலும் சகிக்க முடியாத சூழ்நிலைகள் வரும் போது தான் தேவனோடு போராடி ஜெபிப்போம்.  பெரும்பாலும் அது நம் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகத் தான் இருக்கும்.  ஆனால் அப்படிப்பட்ட நம் சூழ்நிலைகளில் கர்த்தர் நம் மீது கொண்டிருக்கும் நோக்கம், அந்த சூழல்களை அனுமதித்ததின் நோக்கம் ஒன்று நிச்சயமாக இருக்கும்.

நாம் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும்

·         எப்படி வாழ்கிறோம்?

·         துன்பங்களை எப்படி கையாளுகிறோம்?

·         கணவனையும், பிள்ளைகளையும் எப்படி நடத்துகிறோம்?

·         சபையில் நம் பங்களிப்பு என்ன?

என்பதை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் கவனிக்கும் போது, இவை எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை செய்து அவரை மகிமைப்படுத்தி வாழும் வாழ்க்கை காணப்படுகிறதா?  அவரது சித்தம் செய்து வாழ்வதே, பிதாவானவர் நம்மேல் வைத்த சித்தமாய் இருக்கிறது.

இப்பொழுது வசனம் - 11 ஐ வாசித்துப் பார்த்தால், உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன் கத்திப்படுவதில்லை என்று பொருத்தனை பண்ணினாள்.

இதன் மூலம், அன்னாள் தன்சுயநலத்திற்காக அல்லாமல், கர்த்தருடைய ஒரு பெரிய நோக்கத்தை தன்மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற வெளிப்பாட்டைப் பெற்றிருக்கின்றாள் என்று காண்கிறோம். ஒரு மன தைரியமான பொருத்தனை.  மேலும் நசரேயனாக வளர்க்கவும் பொருத்தனை செய்கிறாள்.  தான் கருத்தரிப்பதற்கு முன்பே இந்த முடிவை எடுக்கிறாள். நசரேயன் என்றால் கர்த்தருக்காக முழுமையாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர் என்று பொருள்.

·         அவன் தலை முடி வெட்டப்படலாகாது.

·         அவன் உயிரற்ற எதையும் தொடக்கூடாது.

·         மது மற்றும் திராட்சை பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் எந்த பானத்தையும்  குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தன் மகனை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பதில் அன்னாள் உறுதியாக இருந்தாள்.

அன்னாளை ஆசீர்வதித்த ஏலி :

அன்னாள் குடித்து வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து விட்டார். ஏலியின் கேள்விக்கு தன்னுடைய பதிலின் மூலம் தான் பேலியாளின் மகள் அல்ல என்றுக்  கூறினாள்.  தன் நிலைமை எல்லாவற்றையும் எடுத்துக் கூறினாள்.  அந்த இடத்தில் கணவன் கூட அவளுக்கு உதவி செய்யவில்லை.  தன்னைத் தான் தற்காத்துக் கொண்டாள்.

அன்னாளின் பதிலில் திருப்தியடைந்த ஏலி, அவளை ஆசீர்வதித்தார். "சமாதானத்துடன் போ, நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக" என்றான். பின்னர் அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை. இப்பொழுதும் அன்னாளின் சூழ்நிலைகள் எதுவும் மாறவில்லை.  ஆனாலும் அன்னாள்,

·         மனங்கசந்து  அழுதாள்.

·         பொருத்தனைப் பண்ணினாள்.

·         சமாதானத்துடன் புறப்பட்டுச் சென்றாள்.

நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?

·         கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருங்கள்.

·         சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள்.

·         உங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும்

·         உள்ளான சமாதானத்தை பெற்றுக் கொள்வீர்கள்.

கர்த்தர் இதைச் செய்தால் தான் அவரை நம்புவேன்,   இப்பிரச்சனையிலிருந்து என்னைத் தூக்கி விட்டால் தான் கர்த்தரை பணிந்து கொள்ளுவேன் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.  என் ஜெபத்திற்கு பதில் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பேன், அவரை விசுவாசிப்பேன் என்ற சிந்தனை வேண்டும்.  கர்த்தர் நன்மையானதைத் தருவார். - சங்கீதம்:85:12.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற இளைஞர்களின் சாட்சியைப் பாருங்கள்.  தானியேல் 3-ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். வசனங்கள் 17, 18 -இல் அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் வைத்த வைராக்கியம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது நமக்குத் புரியும்.

17 - நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;

18 - விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

கர்த்தர் மேல் இந்த வைராக்கியம் நமக்குத் தேவை.

அன்னாளின் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர்

மறுநாள் அதிகாலையில் அன்னாளும், எல்க்கானாவும் தங்கள் வீட்டிற்குத் திரும்பிப் போனார்கள்.  கர்த்தர் அன்னாளை நினைத்தருளினார்.   ஒரு குமாரனைப் பெற்று சாமுவேல் என்று பெயரிட்டாள்.

சாமுவேல் - கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்.

அதன் பின் அன்னாள் பிள்ளை பால் மறக்கும் வரை எல்கானாவோடு கூட வருஷந்தோறும் செலுத்தும் பலியையும் பொருத்தனையையும் செலுத்தப் போகவில்லை.

அன்னாள் முதல் முதலாக பிள்ளையை எடுத்துக் கொண்டு ஆலயத்துக்கு செல்லும் போதே தன் பொருத்தனையை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருந்தாள் - 1 சாமுவேல் : 1:22.

தான் கர்த்தரோடு பண்ணின பொருத்தனையை மறக்கவில்லை.  அதிலிருந்து பின்வாங்கவும் சிந்தனை பண்ணவில்லை.

பிரசங்கி:5:4,5

4- நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.

5-நீநேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.

சாமுவேல் தன்  தாயாரோடு 3 அல்லது 4 வருடங்கள் இருந்திருப்பான்.  அந்த கால கட்டத்தில் அவள் சாமுவேலுக்கு என்ன சொல்லி வளர்த்திருப்பாள். மற்ற குழந்தைகளைப் பார்த்து, ஏன் என் தலைமுடி மட்டும் வெட்டப்படாமல் இருக்கிறது என்று சாமுவேல் கேற்றிருப்பான்.  நீ உன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு சேவை செய்ய பிறந்தவன் என்பதை சொல்லி சொல்லி அவனை தயார்படுத்தி இருப்பாள் அன்னாள்.

கர்த்தர் மேல் அன்பு கூறவும், அவர் பேரில் நம்பிக்கையாய் இருக்கவும் கற்றுக் கொடுத்திருப்பாள். தன் மகன் தன்  இல்லாமல் இருக்கக் கூடிய பயிற்சிகளையும் கொடுத்திருப்பாள்.

நாம் நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோம்? சிறு பிராயமுதலே கிறிஸ்துவின் மேல் அன்பாயிருக்கவும், அவர் மேல் நம்பிக்கை வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அதற்கு முதலாவதாக நாம் மாதிரியாக இருக்க வேண்டும்.  நாம் கிறிஸ்துவின் மேல் அன்பாயிருப்போம், அவரையே நம்பியிருப்போம். கர்த்தர் நம் பிள்ளைகளை சிறந்த பிள்ளைகளாக உருவாக்குவார்.

சாமுவேல் ஆலயத்தில் விடப்பட்டான்

சாமுவேல் பால் மறந்த பின்பு எல்கானாவும் அன்னாளும்  சீலோவில் தேவாலயத்திற்குப்  போய் பலியிட்டு, அவனை ஏலியினிடத்தில் கொண்டுபோய் விட்டார்கள்.  மோசேயின் தாயாகிய யோகபெத்தும் தன குழந்தையை கர்த்தர் கரத்தில் ஒப்படைத்து நைல் நதியில் விட்டது போல, அன்னாளும் சாமுவேலை ஏலியின்  வசம் கர்த்தருக்காக ஒப்படைக்கிறாள்.  பின்னாளில் சாமுவேல் தீர்க்கத்தரிசியாகவும், இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகவும் மாறினார்.  சவுலையும், தாவீதையும் இஸ்ரவேலின் ராஜாக்களாக முதலில் அபிஷேகம் பண்ணினார்.

சவாலான சூழ்நிலையில் சாமுவேல்

ஏலியின் இரண்டு பிள்ளைகள் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

1 சாமுவேல்:2:12 - அவர்கள் பேலியாளின் மக்களாய் இருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை.

1 சாமுவேல்:2:13-17 --அவர்கள் பலிசெலுத்த வரும் ஜனங்களை நடத்தின விதம் கர்த்தருக்கு பிரியமானதாக இல்லை.  தங்கள் மனவிருப்பத்தின்படி நடந்து கொண்டார்கள். அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது.

1 சாமுவேல்:2:21-25 ஏலி வயது சென்றவனாயிருந்தான்.  ஆலயத்தில் பலிசெலுத்த வருகிற மக்களிடத்தில் தன் குமாரர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும், ஆசாரிப்புக் கூடார வாசலில் கூட்டங்கூடுகிறஸ்திரீகளோடு ஒழுக்கக்கேடாய் நடந்து கொள்ளுகிறதையும் கேள்விப்பட்டு அவர்களை எச்சரித்தான்.  ஆனாலும் அவர்கள் தங்கள் தகப்பன் சொல்லைக் கேளாமல் போனார்கள்.

கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்ததால் கர்த்தர் அவர்களைச் சங்கரிக்க சித்தமானார் என்று காண்கிறோம் - 1 சாமுவேல்:2:25.  ஏலியும் தன் மகன்களைக் கண்டித்ததோடு விட்டுவிட்டான்.  அவர்களை ஆலயத்தில் இருந்து வெளியேற்றி இருக்க வேண்டும்.  அவன் அதைச் செய்யவில்லை.  ஏன்? தன் இரு மகன்களையும் கர்த்தரை விட அதிகமாக நேசித்தான்.  கர்த்தரே இதை ஒரு குற்றச்சாட்டாக கூறினார். 1 சாமுவேல்:2:29- நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்.

மேலும் அவர்கள் கர்த்தருக்கு கொண்டுவரப்படும் காணிக்கைகளை கனப்படுத்தவில்லை.  அதைக் கொண்டுத் தங்களைக் கொழுக்கப்பண்ணினார்கள்.  எனவே, கர்த்தருடைய சாபம் ஏலியினுடைய சந்ததியின் மேல் வந்தது - 1 சாமுவேல்:2:30-36.

இப்படி ஒரு சூழலில் அன்னாள் தன் மகனை ஆலயத்தில் கொண்டு விட தயங்கி இருக்கலாம். சாக்கு போக்கு சொல்லி இருக்கலாம்.  ஆனால் அவள் அதைச் செய்யவில்லை.  கர்த்தரை நம்பி சாமுவேலை ஏலியின் வசம் ஒப்படைத்தாள்.

இன்றைய உலகின் சூழ்நிலைகளும் ஒழுக்கக் கேடாகத்தான் இருக்கிறது.  நம் பிள்ளைகளை சுற்றிலும் தீமையான ஒழுக்கக்கேடான விஷயங்கள் நிறைந்திருக்கிறது.  அதன் மத்தியிலும் நல்லது எது, தீயது எது என்பதை பகுத்தறிந்து கொள்ளும் ஞ்ஞானத்தைக் கர்த்தர் அளித்தால் மட்டும், பிள்ளைகளை கர்த்தருக்குப் பிரியமானவர்களாக வளர்க்க முடியும்.  அதற்காக ஜெபிப்பது பெற்றோருடைய தலையாய கடமையாய் இருக்கிறது. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுத்து, சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தோடு வாழுவதை பார்க்க ஆசைப்படும் பெற்றோர் அவர்கள் கர்த்தருக்குப் பிரியமான வழியில் நடந்து கொள்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

சாமுவேல் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தாலும் கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான் என்று பார்க்கிறோம். வேதத்தில் 1 சாமுவேல்:2:26 ம் வசனத்தில் அவனைக் குறித்த சாட்சியைப் பார்க்கிறோம்.

அன்னாளின் ஜெபம்:

அன்னாள் சாமுவேலைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்த பின் மனமகிழ்ச்சியோடு காணப்பட்டார்.  அந்த சூழலில் அவள் ஜெபம் பண்ணினாள் என்று பார்க்கிறோம். 1 சாமுவேல்:2:1 மகிழ்ச்சியின் பாடலாக இருக்கின்றது.

அன்னாளின் ஜெபம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இயேசுவின் தாயாகிய மரியாளின் ஜெபத்திலும் எதிரொலித்தது(லூக்கா :1:46-55).  இரண்டு ஜெபங்களிலும் பல ஒற்றுமைகளைக் பார்க்கிறோம்.

அன்னாளின் ஜெபம் ஒரு தீர்க்கதரிசன உரையோடு முடிகிறது.

"....தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்." - 1 சாமுவேல்:2:10.

"அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்ற வார்த்தை "மேசியாவைக்" குறிப்பதாகும்.  மேசியாவைப் பற்றி குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை.  இந்த இடத்தில் மேசியாவைப் பற்றிச் சொல்லுவது மிகவும் பொருத்தமாகக் காணப்படுகிறது.  ஏனெனில் சாமுவேல் தான் இஸ்ரவேலின் முதல் இரண்டு ராஜாக்களையும் அபிஷேகம் செய்து, மேசியா பிறக்கப்போகும் தாவீதின் சந்ததியையும் இஸ்ரவேலருக்கு  அறிமுகப்படுத்தினான்.

நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்ட அன்னாள்.

சாமுவேலை ஆலயத்தில் விட்டு விட்டு பெற்றோர் திரும்பித் தங்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.  தன்னை ஆலயத்தில் விட்டதற்கு சாமுவேல் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.  அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அம்மாவை விட்டு தனியாக இருக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கவில்லை.  அதற்கான எந்த ஆதாரமும் வேதத்தில் இல்லை.  முழுமையாக தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்தான்.  சிறு பருவத்திலேயே கர்த்தர் ஒரு முதிர்ச்சியைக் கட்டளை இட்டிருக்கிறார்.

அதே போல தான் ஈசாக்கும் தன் தகப்பனாகிய ஆபிரஹாம் தன்னைப் பலியிடப்போகிறார் என்று தெரிந்தும் அவன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. அமைதியோடு தன் தகப்பனுடைய சொல்லுக்கு கீழ்ப்படிந்தான் - ஆதியாகமம்:22:9.

இத்தகைய கீழ்ப்படிதல் நம் பிள்ளைகளுக்கும் தேவை.

சாமுவேல் சணல்நூல் ஏபோத்தை தரித்துக் கர்த்தருக்கு முன்பாக பணிவிடை செய்து கொண்டிருக்கிறான்.  அன்னாளும், எல்க்கானாவும் வருஷந்தோறும் வந்து பலிசெலுத்துகிறார்கள்.  அப்பொழுதெல்லாம் அன்னாள் ஒரு சிறு சட்டையைத் தைத்துக் கொண்டு வருகிறாள்.  ஆனாலும் தன் மகனை தூக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று எண்ணங்கொள்ளவில்லை -   1 சாமுவேல்:2:19.  கர்த்தருக்கு செய்த் பொருத்தனையில் உறுதியோடுக் காணப்பட்டாள்.

நம்மிடமும் இத்தகைய உறுதி காணப்பட வேண்டும். கர்த்தருக்காக நேரம் ஒதுக்குவோம், தினமும் வேதம் வாசித்து, தியானித்து, ஜெபிப்போம் என்று வருட துவக்கத்தில் உடன்படிக்கை பண்ணியிருப்போம்.  ஆனால் சில நாட்களில் அதில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விடும்.  ஆனாலும் சோர்ந்து போய் விடாதிருங்கள்.  திரும்பத் திரும்ப அந்த உடன்படிக்கையை நிலைநிறுத்துவதில் உறுதியாய் இருங்கள்.  கர்த்தர் மகிழ்ச்சியடைவார்.  உங்களை ஆசீர்வதிப்பார்.

ஐந்து மடங்காக ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதிகள்

அன்னாள் சாமுவேலை தேவாலயத்தில் கொண்டு போய் விட்டதினால் ஐந்து மடங்காக ஆசீர்வதிக்கப்பட்டனர் அன்னாளும், எல்க்கானாவும்.  ஏலி எல்க்கானாவை ஆசீர்வதிக்கிறார்.  கர்த்தருக்காக ஒன்றைக் கொடுத்தார்கள்.  ஆனால் மேலும் ஐந்து குழந்தைகளை கர்த்தர் கொடுத்தார்.- 1 சாமுவேல்:2:20,21.

சாமுவேலோ தேவாலயத்தில் கர்த்தருக்குப் பணிவிடை செய்து வளர்ந்து வருகிறான்.  அவன் பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கு, மனுஷருக்கு பிரியமாய் நடந்து கொண்டான் - 1 சாமுவேல்:2:26.  இதனை நாம் ஏற்கனவே பார்த்தோம்.

கர்த்தருக்குப் பிரியமான ஒரு மகனைப் பெற்றெடுத்ததன் மூலம் அன்னாள் பாக்கியசாலியாகக் காணப்பட்டாள்.  ஆனாலும் அன்னாள் ஏன் இத்தனை துன்பங்களினூடே கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டாள்?  இஸ்ரவேலர் நியாயாதிபதிகளின் தலைமையில் வாழ்ந்து வந்தார்கள்.  நியாயாதிபதிகள் மோசேயின் உடன்படிக்கையை மீறி, பாவமான காரியங்களைச் செய்தார்கள்.  சிலைகளை வணங்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல நல்ல தலைவர் இல்லாததினால், அவர்களை நீதியில் வழிநடத்த கர்த்தர் தெரிந்து கொண்ட மனிதன் தான் சாமுவேல்.  சாதாரணமாக மற்ற குழந்தைகளைப் போல சாமுவேல் பிறந்திருந்தால், அன்னாள் சாமுவேலைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மனதில்லாதிருந்திருப்பாள்.  ஆனால் இந்த துன்பங்களைக் கடந்து வருவதன் மூலம் கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மையைப் பெறுகிறாள். அதைத் திரும்ப கர்த்தருக்கே அர்ப்பணிக்கிறாள்.

இந்த அர்ப்பணிப்பு தான் சாமுவேலை ஒரு பெரிய நியாயாதிபதியாக, தீர்க்கதரிசியாக மாற்றியது.  இஸ்ரவேலரை துன்மார்க்கத்தினின்று நீதிக்கு நேராக சாமுவேல் வழிநடத்தினார்.

இன்றும் அநேகர் கிறிஸ்துவை அறியாமல் பாவத்திற்குள்ளும், துன்மார்க்கத்திற்குள்ளும் வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களை மீட்டெடுத்து கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தும் வேலையைத் தான் மிஷனெரிகள் செய்து வருகிறார்கள்.  ஆனால் அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சமாக இருக்கிறார்கள்.  ஆத்துமாக்கள் ஏராளம் ஆனால் அவர்களை கிறிஸ்துவுக்கு நேராய் திருப்பும் மிஷனெரிகள் கொஞ்சமாய்க் காணப்படுகிறார்கள்.  அத்தகைய மிஷனெரிப் பணி செய்ய நாம் நம் குழந்தைகளை அனுப்ப ஆயத்தமாய் இருக்கிறோமா?

நம் பிள்ளைகளுக்கு சிறு பிராயம் முதலே கல்வியைக் கற்பிப்பதைப் போல, கர்த்தருக்கு பணிவிடை செய்வதில் கிடைக்கும் ஆனந்தத்தையும் போதியுங்கள்.  அவர்களும் ஒரு சாமுவேலை மாறட்டும்.  சமூகம் கிறிஸ்துவுக்கு நேராய் வழிநடத்தப்படும்.

அன்னாளின் இந்தக் கஷ்டப்பாடுகள் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ள முடிகிறது?

கர்த்தரை சார்ந்து வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

உங்கள் தேவைகளைக் கர்த்தரிடம் தெரியப்படுத்துங்கள்.  பதிலைப் பெற்றுக் கொள்வீர்கள்.

கர்த்தர் ஒருவரால் மட்டுமே மகிழ்ச்சியைத் தர முடியும்.

கஷ்டப்பாடுகள், சோதனைகளைக் கடந்து வரும் போது தான் நாம் ஜெயத்தைப் பெற்றுக்கொள்ளுவோம்.

கர்த்தருடைய சித்தத்திற்கு நேராக வழிநடத்திச் செல்லப்பட ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தர் நம் மேல் வைத்திருக்கும் இரக்கம், தயவு, கிருபை ஆகியவற்றினால் நம் கஷ்டப்பாடுகளை சகித்துக் கொள்ளக்கூடிய பலனைத் தருவார்.  நம் திராணிக்கு மேலாக அவர் நம்மை சோதிக்க மாட்டார்.

1 கொரிந்தியர் :10:13 -  மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

சோதனையின் முடிவில் கர்த்தர் ஜெயத்தைத் தருவார்.

துன்பங்கள் வரும் போது கர்த்தர் நம்மைக் கைவிட்டு விட்டார் என்று எண்ணங்கொள்ளாதேயுங்கள்.  ஒருவேளை நாம் எல்லா ஆசீர்வாதங்களை பெற்று சௌகரியமான வாழ்க்கை வாழலாம்.  ஆனால் நம்மோடு கூட இருப்பவர்கள் துன்பங்களில் உழலலாம்.  அவர்களைக் குற்றப்படுத்தாதீர், ஏளனம் செய்யாதீர், குறைகளை சுட்டிக் காட்டிப் பேசாதீர்.  உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்.  அடுத்தவர் கஷ்டங்களை பார்த்து ஆனந்தம் கொள்ளாதீர்.

பிறருடைய கஷ்டத்தில் பங்கெடுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள்.  அவர்களோடு தோள் கொடுத்து ஆறுதல்படுத்துங்கள்.  பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாக இருக்கும்.

நம் மூலம் கர்த்தர் மகிமைப்படும்படியாக அவர் சோதனைகளை அனுப்புகிறார்.

கஷ்டங்களை நினைத்துக் கவலைக் கொள்ளாதீர்.  அன்னாளைப் போல இருதயத்தைக் கர்த்தரிடம் ஊற்றி விடுங்கள்.  துக்கமுகமாய் இராதிருங்கள்.  நம் கவலைகளை விசாரிக்கிற தேவன் நமக்கு உண்டு.

1 பேதுரு:5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.