நீதிமொழிகள் : 3: 5,6
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நம்முடைய வாழ்வின் பாதையில் எல்லா நாட்களும் சீராக ஒரே நேர்கோட்டில் செல்வதில்லை. சில நேரங்களில் நாம் எடுக்க வேண்டிய முடிவுகளில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். எப்பக்கம் செல்ல வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருக்கலாம். நண்பர்கள், குடும்பத்தார் பல விதமான கருத்துக்களைக் கூறி இன்னும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். எதிர் காலத்தைக் குறித்த பயம் நம்மை ஆட்கொண்டு இருக்கலாம்.
அந்நேரங்களில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதனை இந்த வசனம் தெளிவுபடக் கூறியுள்ளது. நாம் நம் புத்தியை உபயோகித்து அதற்கான காரணங்களை ஆராய வேண்டாம். பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டு கொள்வதில் குழம்பிப் போக வேண்டாம்.
கர்த்தரில் நம்பிக்கையாய் இருத்தல் என்பது நம் வாழ்வின் அடித்தளமாயிருக்க வேண்டும். எதிர்மறையான சூழலில் கூட கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருப்பதையே கர்த்தர் விரும்புகிறார். வாழ்வில் சோர்வுகள், கஷ்டங்கள் வரும் போது நம் சுய புத்தியின் மேல் சாயாமல் இருப்போம். முழு இருதயத்தோடு கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கும் போது பயம் மற்றும் கவலைகள் நம்மை விட்டு அகன்று போகின்றது. சோர்வுகள் மற்றும் மனஅழுத்தங்களின் போது மனதில் உறுதியோடு நின்று ஒவ்வொரு சூழ்நிலைகளையும் கடந்து செல்ல உதவுகின்றது. நம் சுய நலத்திற்கு உட்பட்ட எல்லா விருப்பங்களையும் மறந்து கர்த்தரின் சித்தத்திற்கு உட்பட்டு வாழ வழி செய்கிறது.
கர்த்தர் மேல் எந்த அவநம்பிக்கையும், சந்தேகமும் இல்லாமல் முழு மனதுடன் அவரை விசுவாசிக்க வேண்டும். ஒருவேளை நாம் நம் சுயபுத்தியை பயன் படுத்தி நம் பிரச்சனைகளில் வெற்றியைக் கண்டு கொண்டாலும், கிறிஸ்துவை சார்ந்து வாழ்வதில் உள்ள அனுபவத்தை இழந்தவர்களாக இருப்போம்.
நாம் வாழ்வில் ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு முடிவுகளை எடுத்திருப்போம். ஆனால் கர்த்தர் நமக்காக பெரிய வரைபடத்தையே வைத்திருக்கிறார். நாம் நம் சுயபுத்தியின் மேல் சாயும் போது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் வரை படத்தைப் பார்க்க முடியாமல் போகிறது. அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை.
அவரில் முழுமையாய் சார்ந்து நிற்கும் போது, நம் பாதைகளில் எல்லாம் அவரை நினைத்துக் கொள்ளும் போது கர்த்தர் நமக்கான பாதைகளைச் சரியான நேரத்தில், செம்மையானதாக சீரமைத்துத் தருவதை உணர்ந்து கொள்ளலாம். அந்த செவ்வையான பாதையில் நடக்கும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கர்த்தரில் நாம் நம் முழு இருதயத்தோடும் நம்பிக்கையாயிருக்கிறோம் என்பது நம் வார்த்தைகளில், செயல்களில் வெளிப்பட வேண்டும். நம் பார்வைகள், நம் அணுகுமுறைகள், சிந்தனை ஓட்டங்கள் கூட அதனை பிரதிபலிக்க வேண்டும். ஒரு சிறு குழந்தையைப் போல நாம் கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் இருக்க வேண்டும்.
எனவே,
1. உன் சுய புத்தியும் மேல் சாயாதே,
2. உன் முழு இருதயத்தோடு கர்த்தரில் நம்பிக்கையாயிரு,
3. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்.
4. அப்பொழுது அவர் நம் பாதைகளைச் செவ்வைப்பண்ணுவார்.
சங்கீதம் :37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
ஏசாயா:30:21
நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
ஜெபம்:
பரலோகப் பிதாவே, நீர் தந்த இந்த அறிவுரைக்காய் நன்றி. நாங்கள் எங்கள் சுய புத்தியின் மேல் சாயாமல், உம்மில் முழு இருதயத்தோடும் நம்மிபிக்கையாயிருக்க உதவி செய்யும். நீர் எனக்காக எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்வீர் என்ற நம்பிக்கையை தந்ததற்காக நன்றி. எங்கள் பாதைகளில் எல்லாம் உம்மை நினைத்துக் கொள்ள உதவும். எக்காலத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை சார்ந்து வாழ்ந்து, அதன் மூலம் உமக்கு கனமும், மகிமையும் கொண்டு வருகிற பிள்ளையாக காணப்பட அருள் தாரும். உம்மிலே நம்பிக்கையாயிருந்து, உம்மிலே தினம் தினம் பெலன் கொள்ள உதவும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
No comments:
Post a Comment