Thursday, January 21, 2021

கர்த்தருக்குப் பயப்படுவதினால் வரும் பலன்

 


நீதிமொழிகள்:22 :4

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று உயர் கல்வி கற்று, உயர் பதவிகளை அடைந்து, பலவித ஆசீர்வாதங்களைப் பெற்று, வாழ்க்கையில் சுபிட்சமாக வாழ்ந்து வருகிறோம்.  அதற்கெல்லாம்  காரணம் ஆதி நாட்களில் நற்ச்செய்தியை அறிவித்த மிஷனெரிமார்களே.  அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்களாய் இருக்கிறோம்.  அவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம். 

இன்று ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ்கின்ற நாம் அந்த ஆசீர்வாதங்களுக்கு காரணராகியக் கர்த்தரை மறந்து விடுகிறோம்.  வார நாட்களில் கர்த்தரை மறந்து வாழ்ந்தால் கூட ஞாயிற்றுக்கிழமைகளில்  நாம் கர்த்தரை ஆராதிக்கச் சென்று விடுவோம்.  ஆனால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நம்மிடம் இருக்கிறதா என்று பார்த்தால், சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு நாம் கர்த்தருக்குப் பயப்படுகின்றோம்.  ஏதேனும் தவறுகள் பாவங்கள் செய்தால் நாம் கர்த்தரால் தண்டிக்கப்பட்டுவிடுவோமே என்ற பயம் தான் பலரிடம் மேலோங்கி இருக்கும். 

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது அது மட்டுமல்ல. கர்த்தர் மேல் நாம்  செலுத்தும் மரியாதைக்குரிய பயபக்தியே அவருக்கு பயப்படுதல் ஆகும்.  கர்த்தருக்குப் பயப்படுவது நாம் அவரை மிகவும் நேசிப்பதாகும்.  கர்த்தருக்குப் பயப்படுவதினால் நமக்குக் கிடைக்கும் பலன் என்ன என்று இன்று பார்ப்போம்.

1.   கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்(நீதிமொழிகள் : 10:27)

2.   கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்குத் திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கு அடைக்கலம் கிடைக்கும்(நீதிமொழிகள்:14:26)

3.   கர்த்தருக்குப் பயப்படுவதினால் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம்(நீதிமொழிகள்:14:27)

4.   கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்(நீதிமொழிகள்:16:6)

5.   கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவன் தரும்.  திருப்தியைத் தரும்.  தீமை அணுகாது(நீதிமொழிகள்: 19:23)

மேலும் கர்த்தருக்கு உண்மையாய்ப் பயப்படுவதின் மூலம் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று வேதம் கூறுகிறதும். 

பல சூழ்நிலைகளில் உலக மனுஷர்களைப் பிரியப்படுத்த நேரிடலாம்.  அவர்களுக்கு பயந்து நடக்க நேரிடலாம். நாம் கர்த்தருக்குப் பயந்து வாழ்வில் நேர்மையாய் இருந்தால் உலக மனிதர்களுக்கு பயப்படத்தேவை இல்லை. 

எல்லாவற்றிலும் உண்மையாயிருப்போம், தாழ்மையோடு இருப்போம்.  எல்லா சூழ்நிலையிலும் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாயிருப்போம்.  இன்னும் மென்மேலும் கர்த்தரை நேசிப்போம்.  அப்பொழுது ஐசுவரியமும், மகிமையும், ஜீவனும் நமக்குக் கிடைக்கும்.  அப்படிக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

சங்கீதம்:34:9,10

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

சங்கீதம் :112:1-3

அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

ஜெபம்:

அன்புள்ள கர்த்தாவே, நீர் மகிமை பொருந்தியவர், நீர் மாட்ச்சிமை நிறைந்தவர், உம்முடைய பலத்த கரத்திற்குள் வைத்து நீர் எங்களைப் பாதுகாத்து வருவதற்காய் நன்றி.  நாங்கள் உமக்கு பயந்து நடக்க உதவி செய்யும்.  அதன் மூலம் ஞானமும், ஜீவனும், திட நம்பிக்கையும் பெற்றுக் கொள்ளக் கிருபை புரியும்.  எங்கள் பிள்ளைகளுக்கு அடைக்கலமாய் இரும்.  உமக்கு பயந்து நடப்பதன் மூலம் தீமையை விட்டு விலக அருள் புரியும். நாங்கள் திருப்ப்தியோடு எல்லா நலமும் பெற்று உமக்குப் பிரியமான வாழ்வு வாழ அருள் தாரும்.  இயேசுவின் நாமத்தில் ஆமென்.


No comments:

Post a Comment