யோவான் : 10 : 10
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
இயேசு கிறிஸ்து யோவான் 10-ம் அதிகாரத்தில் நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்லுகிறார். ஒரு மேய்ப்பனானவன் தன் ஆடுகளுக்காக செய்கின்ற காரியங்கள், ஆடுகளின் நலனுக்காக எடுத்துக்கொள்ளுகின்ற சிரமங்கள் எல்லாவற்றையும் சங்கீதக்காரனாகிய தாவீது 23-ம் சங்கீதத்தில் அழகாக எழுதி வைத்துள்ளார். காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் புத்திரரை மீட்கும் பொருளாக யேசுவானவர் நல்ல மேய்ப்பனாக வந்தார். ஆனால் இன்று இஸ்ரவேல் வீட்டாருக்கு மாத்திரமல்ல மனுக்குலம் அனைத்திற்கும் நல்ல மேய்ப்பனாக நமதாண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார்.
நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்தார். இரத்தம் சிந்தி மனுக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்தார். ஆனால் பிசாசானவன் கொல்லவும் அழிக்கவும் திருடவும் மட்டுமே வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது. நம் வாழ்வின் சமாதானத்தைத் திருடிக்கொண்டு போகிறாராம். உலக பிரகாரமாக வருகிற பிரச்சனைகளின் நிமித்தம் நம் சந்தோஷத்தை சாத்தான் பறித்துக் கொண்டு போய்விடுவான். மனம் கலங்கி, சோர்ந்து போகச் செய்வான். மனச் சோர்வு சிலரது வாழ்வையே முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது. ஆனால் தேவ பிள்ளைகளாகிய நாம் கலங்க வேண்டியதில்லை.
இன்றைய சூழலில் முக்கியமாக கர்த்தருக்கு நாம் கொடுக்க வேண்டிய நேரத்தைப் பிசாசு திருடிக் கொண்டு சென்று விடுகிறான். கேளிக்கைகளிலும், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலமும் நம்மை அறியாமல் நம் நேரம் வீணாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. தேவ பிள்ளைகளே கவனம் தேவை, காலத்தைப் ப்ரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
நம்முடைய நல்ல மேய்ப்பன் நமக்கு ஜீவன் கொடுக்க வந்தார். எல்லா விதத்திலும் நம்மைப் பரிபூரணப்படுத்துவார். எனவே அந்த மேய்ப்பனை பின்பற்றிச் செல்லுவோம். கிறிஸ்துவின் மந்தைகளை சிதறடிக்கச் செய்கிற சாத்தானின் எந்த சதித் திட்டங்களும் நிறைவேறாது. உலகத்தில் உபத்திரவம் உண்டு, ஆனாலும் உலகத்தை ஜெயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் சாட்சியாய் நிற்பதென்பது லேசான காரியமல்ல. கிறிஸ்தவர்களுக்கு நெருக்கங்கள் துன்பங்கள் அதிகமாகும் போது நல்ல மேய்ப்பனைப் பின்பற்றிச் செல்வோமா? இல்லை பிசாசாகிய திருடனை பின்பற்றி உலகத்திற்குள்ளாக சென்றுவிடுவோமா? நம் நிலைப்பாடு என்னவாக இருக்கும். யோசித்துப் பாருங்கள். உபாத்திரவத்தின் காலம் வரும் போது பிசாசானவன் தேவப் பிள்ளைகளை மனமடிவாக்கி கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிக்க முயற்சி எடுப்பான். நினைவில் கொள்ளுங்கள் கிறிஸ்துவை உதாசீனப்படுத்தினால் நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் கிறிஸ்துவால் உதாசீனப்படுத்தப்படுவோம். அவருடையக் கோபத்திற்கு ஆளாவோம்.
எனவே இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து நிற்போம். பிசாசின் தந்திரங்களுக்கும், சாதிகளுக்கும் சிக்காமல் நல்ல மேய்ப்பனைப் பின் செல்லுவோம். நாம் தாழ்ச்சியடைந்து போகாமல், மரண இருளின் பள்ளத்தாக்கில் கூட நம்மை செவ்வையாய் நடத்தி முடிவிலே என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய பரலோக மகிமையின் வீட்டை சுதந்தரித்துக் கொள்ளுவோம். இதற்காகவே இந்த ஜீவன் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
லூக்கா :19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
மத்தேயு :20:28
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.
ஜெபம்:
அன்புள்ள பிதாவே, நீர் எங்கள் நல்ல மேய்ப்பனாய் இருப்பதற்காய் நன்றி. உம்மைப் பின்பற்றி நடக்க உதவி செய்யும். சந்துருவின் சதிவலைகளில் சிக்கிக் கொள்ளாமல் காலத்தையும் நேரத்தையும் உமக்கு பிரியமான முறையில் ப்ரயோஜனப்படுத்திக் கொள்ள உதவும். உம்முடைய அன்பை விட்டு எங்களை பிரிக்கும் எந்த செயல்களையும் நாங்கள் செய்யாதபடி காத்துக் கொள்ளும். பரிபூரணமான வாழ்வை உம்மிலே நாங்கள் பெற்று நித்திய ராஜ்யத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க எங்களைத் தகுதிப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.
No comments:
Post a Comment