Tuesday, January 19, 2021

ஷேமத்தைக் கொடுக்கும் கர்த்தர்

 

2 நாளாகமம்:7 :14

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

கர்த்தர்  நம்மை ஆசீர்வதிப்பதற்கு நாம் என்னென்ன தகுதிகள்  கொண்டவர்களாய்  இருக்க  வேண்டும் , கர்த்தர்  நம்மிடம்  எதனை  எதிர்பார்க்கிறார்  என்பதனை  இவ்வசனம்  கூறுகிறது .  இஸ்ரவேல்  மக்கள்  தங்களைத்  தாழ்த்தி  கர்த்தருடைய  முகத்தைத்  தேடுவதைக்  குறித்து  சாலமன் ராஜாவுக்கு  கர்த்தர்  எடுத்துரைக்கிறார்.   இஸ்ரவேல்  மக்களுக்கு  கொடுக்கப்பட்ட  வாக்குறுதி  இன்று  மனம்  திரும்பித், தங்களைத்  தாழ்த்தி  ஜெபம்  பண்ணி  கர்த்தரின்  முகத்தைத்  தேடும்  யாவருக்கும்  பொருத்தமாக  காணப்படுகிறது.  மனம்  திரும்பியிருக்கும்  மக்களின்  ஜெபத்தைக்  கேட்க  கர்த்தர்   ஆயத்தமாயிருக்கிறார்  என்று  தெளிவுபடுத்துகிறது.

வேதத்தில்  பல  ஆசீர்வாதமான  வாக்குறுதிகள்  கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆனால்  அவை  எல்லாவற்றிற்கும்  முன்பு  நாம்  கடைபிடிக்க  வேண்டிய  காரியங்கள்  கொடுக்கப்பட்டுள்ளது.  இவ்வசனத்தில்  பரலோகத்தின்  தேவன்  நம்  ஜெபத்தைக்  கேட்க  வேண்டுமென்றால்  நான்கு  முக்கியமான  கட்டளைகள்  கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும்  இவ்வாக்குறுதி  கர்த்தர்மேல்  நம்பிக்கை வைத்து  அவருடைய  நாமத்தை  தரித்த  ஜனங்களுக்கு  மட்டுமே. 

முதலாவது  நம்மைத்  தாழ்த்த  வேண்டும்.  நாம்  நம்மைத்  தாழ்த்தும்  போது கர்த்தருடைய  சித்தத்திற்கு  நம்மை  வடிவமைக்க  அவரை  அனுமதிக்கிறோம்.  அதனால்  நம்  வாழ்க்கை  மாற்றம்  பெற  ஆரம்பிக்கிறது. 

இரண்டாவது  ஜெபம்  செய்ய  வேண்டும்.  கர்த்தருக்குள் நாம்  வளர்ந்து  பெருக ஜெபம்  ஒரு  அடித்தளமாக  அமைகிறது. அந்த  ஆழமான  உறவை  வளர்த்துக்  கொள்வதன்  மூலம்  நம்  வாழ்வு  புத்துயிர்  அடைகிறது.  ஆவிக்குரிய  மறுமலர்ச்சி  நம்  உள்ளத்தில்  காணப்படும்.   

மூன்றாவது  நாம் கர்த்தருடைய முகத்தைத் தேட வேண்டும்.  ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அதனைத் தேட வேண்டும்.  அது போல கர்த்தரை நாம் தேடினால் மட்டுமே அவரை கண்டடைய முடியும்.  ஆவியானவரின் வழிநடத்துதலை, அவர் அசைவாடுவதை நம்மால் கண்டு கொள்ள முடியும். 

நான்காவது நம் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்ப வேண்டும்.  நாம் நம்மைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, கர்த்தரின் முகத்தைத் தேடினாலும் நம் பொல்லாத வழிகளை, நம்  பாவங்களை நம்மை விட்டு விலக்காவிட்டால் கர்த்தர் செயலாற்றுவதைக் நம்மால் காண முடியாது.  நம் பாவங்களை நாம் மனதார அறிக்கைப் பண்ணும் போது அவர் நம் பாவங்களை மன்னித்து நம்மை நேரான பாதையில் வழிநடத்துவார். 

இந்த நான்கு காரியங்களையும் நாம் கடைபிடிக்கும் போது பரலோகத்தின் தேவனானவர் நம் ஜெபத்தைக் கேட்டு,  நம் பாவங்களை மன்னிப்பார். தேசத்திற்கு மற்றும் நம் குடும்பங்களுக்கு ஷேமத்தைக் கொடுப்பார். 

ஏசாயா :55 :6 , 7

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

புலம்பல்: 3 :40 ,41

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.

நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

ஜெபம்:

பரலோகப் பிதாவே, நீர் தந்த இந்த வாக்குத்தத்தத்திற்காய் நன்றி.  உம்முடைய நாமத்தை நாங்கள் தரித்துக் கொள்ள உதவி செய்யும்.  எங்களைத் தாழ்த்தி உம் பாதத்தில் சரணடைகிறோம்.  எங்கள் விண்ணப்பங்களை உம் சிம்மாசனத்திற்கு நேராக ஏறெடுக்கிறோம், உம்முடைய முகத்தைத் தேடுகிறோம், எங்கள் பாவங்களைத் தயவாய் மன்னியும்.  எங்கள் தேசத்திற்கு ஷேமத்தைக் கட்டளையிடும்.  எல்லாரும் சுபிட்சமாக வாழ அருள் புரியும்.  இயேசுவின் நாமத்தில் ஆமென்.                     


No comments:

Post a Comment