Wednesday, February 3, 2021

நம்மோடு கூட இருக்கும் கர்த்தர்

சங்கீதம்:23:4

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 

தாவீது கோலியாத்தைக் கொன்ற நாள் முதல் சவுலுக்கு அஞ்சி வாழத் தொடங்கினார். அவர் தனது வாழ் நாளின் பெரும்பான்மையான நாட்களை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கெபிகளிலும் மலைகளிலும் மறைந்து வாழ்ந்தார். இஸ்ரவேலின் தேவன் அவரை எல்லா சூழலிலும் காத்து நடத்தினார். எனவே தான் அவர் இந்த வசனத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து சொல்லி இருக்க வேண்டும். 

தம் ப்ரசன்னத்தினால் பாதுகாக்கும் மேய்ப்பன்.

கர்த்தராகிய மேய்ப்பர் நம்மை சரியான பாதையில் வழி நடத்திச் செல்கிறார். அப்படியும் கூட நம்மை ஒருவித பயம் ஆட்கொள்ளுகிறது.

v  முந்தின வசனங்களில் அடிப்படை தேவைகளை சந்தித்து, அமைதியாய் நம்மை வழி நடத்தி, சரியான பாதையைக் காட்டும் மேய்ப்பர் என்று பார்த்தோம். அப்படிப்பட்ட மேய்ப்பன் இந்த வசனத்தில் நமக்கு பாதுகாப்பு வழங்குவதைக் காணலாம்.

v  தேவனாகிய கர்த்தர் சரியான பாதைகளில் நம்மை வழிநடத்திச் செல்லும் போது கூட நாம் பயப்படும்படியான காரியங்கள் நேரலாம்.

v  நோய்கள், விபத்துகள் போன்றவை நாம் மரண பள்ளத்தாக்கில் யாருடைய உதவியும் இல்லாமல் நாம் பயணிப்பதைப் போன்றும், கர்த்தர் நம்மை கைவிட்டு விட்டார் போன்றும் ஒரு தோற்றத்தைக் கொடுக்கும்.

v  இந்த சூழ்நிலைகள் கர்த்தர் நம்மை தவறான பாதையில் வழி நடத்திச் செல்கிறாரோ என்ற எண்ணத்தை , சந்தேகத்தை உருவாக்கலாம்.

இந்த விதமான இருண்ட நேரங்களில் தான் கர்த்தர் நம்மை எவ்வாறு பாதுகாத்து வழிநடத்திச் செல்கிறார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் தான் தாவீது நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் என்று தைரியமாக கூறுகிறார்.

ஸ்தேவான் தான் மரணப் பள்ளத்தாக்கின் மத்தியில் கடந்து சென்ற போதும் கூட தேவனைத் தொழுது கொண்டதாக வேதம் கூறுகிறது.

அப்போஸ்தலர்:7:59 

அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில் அவனைக் கல்லெறிந்தார்கள்.

தேவன் அந்நேரம் அவரை தேற்றி, பலப்படுத்தி இருந்ததாலேயே அவரால் தேவனைத் தொழுது கொள்ள முடிந்தது.

 இன்னும் அநேக தேவ பிள்ளைகள் மரண பள்ளத்தாக்கை கடந்து போகும் போது சந்தோஷத்தோடும், சமாதானத்தோடும் காணப்பட்டார்கள்.  நோயின் தாக்கங்களினால் படுக்கைகளில் இருப்போர் கூட கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதைக் காணலாம்.

கஷ்டம் , துயரம் , துன்பம் , நோய் , துக்கம் நம் வாழ்வில் இருந்தாலும் அதனைக் குறித்த பயத்தை நம் மேய்ப்பனாகிய கர்த்தர் நம்மை விட்டு எடுத்து போடுவார். எனவே எந்த சூழ்நிலையாயினும் கலங்க வேண்டாம். அந்த பள்ளத்தாக்கினூடே பாதுகாப்பாக நடத்திச் செல்லும் மேய்ப்பர் நமக்கு உண்டு. 

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்

ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பனின் கோலின் நுனியில் வளைந்த ஒரு கைப்பிடி பகுதி காணப்படும். அது பொதுவாக ஒரு செம்மறி ஆட்டின் கழுத்தில் பொருத்த போதுமானது. ஒரு ஆடு குழியில் விழுந்தால் அதை வெளியே எடுக்க அந்த வளைவை பயன்படுத்துகிறார்கள். ஆடுகளை வேட்டையாட வரும் நாய்கள் மற்றும் ஓநாய்களை அந்த கோலைப் பயன்படுத்தி விரட்டுகிறார்கள்.

உன்னத தேவனின் பிள்ளைகளாகிய நாமும் எத்தனை முறை வாழ்க்கையில் சறுக்கி விழுந்திருக்கிறோம்? எத்தனை பிரச்சனைகளில் அகப்பட்டிருக்கிறோம்? அந்நேரங்களில் நம் மேய்ப்பர் நம்மை அந்த பிரச்சனைகளில் இருந்து விடுவித்ததை உணர்ந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் கர்த்தர் நம்மை எந்த விதமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து, விடுவிக்கிறார் என்பதை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாம் ஆச்சரியப்படும் விதங்களில் அவர் நம்மைப் பாதுகாத்து வருவதை நாம் அறிந்து கொள்ள முடியும். 

சிந்திக்க

v  கர்த்தர் காட்டும் சரியான பாதைகளில் செல்கிறீர்களா அல்லது உங்கள் சுயம் காட்டும் பாதையை தெரிந்தெடுத்து செல்கிறீர்களா?

 

No comments:

Post a Comment