Saturday, January 9, 2021

உள்ளான மனிதனைப் புதிப்பித்துக் கொள்ளுங்கள்

 

2 கொரிந்தியர்:4:16 

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

2 கொரிந்தியர் நிருபம் பவுல் முதன் முதலாக கொரிந்துப் பட்டணத்திற்கு சென்ற பொது நிறுவப்பட்ட முதல் சபை மக்களுக்கு எழுதப்பட்டது.  எபேசுவில் ஊழியம் செய்த  இச்சபையினுள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் சபை மக்களின் உலக பிரகாரமான வாழ்க்கை ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கு அறிவுரைக் கூறும் வண்ணமாக இக்கடிதத்தை எழுதுகிறார்.  தன்னைப் பற்றியும் தன் ஊழியத்தைப் பற்றியும் அதிகம் கூறுகிறார்.  இந்நிருபத்தை பவுலின் சாட்சியாகக் கூடக்கொள்ளலாம்.

பவுல் தனது ஊழியத்தில் பலவிதமான கஷ்டப்பாடுகளை எதிர்கொண்டார்.  கல்லெறிதல், கப்பல் விபத்து, சிறைவாசம் போன்ற கஷ்டங்களை அனுபவித்தார்.  மேலும் தன் சொந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டார். ரட்சிப்பின் செய்தியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இந்த துன்பங்களை சகித்துக் கொண்டார்.  எவ்வளவு நெருக்கண்கள் வந்தபோதும் ஒடுங்கிப்போகவும் இல்லை, கலக்கமடைந்து மனமுறிந்து போகவுமில்லை(2 கொரிந்தியர்:4:8).

இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நாம் புதிய சிருஷ்டியாக இருக்கிறோம். இதுவே சுவிசேஷத்தின் நோக்கமென்பதை தெளிவுபடுத்தவே பவுல் முனைகிறார்.  எத்தனைக் கஷ்டப்பாடுகள் வந்தாலும் கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்க அழைக்கப்படுகிறோம்.  கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் போது கலங்கவோ, சோர்வடையவோ தேவை இல்லை.  நம் மண்ணான சரீரம் வயது செல்லச் செல்ல பாலன் குன்றிப் போனாலும், நம் உள்ளம் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்ட வேண்டும்.

ரட்சிப்பினால் நாம் பெற்ற புதிய வாழ்க்கை கிறிஸ்துவின் சாயலாக மாற வேண்டும்.  நாம் விசுவாசத்தில் வளர்ந்து பெருக வேண்டும்.  கிருபையிலே வளர்ந்து, கிறிஸ்துவைப் பற்றிய நெருக்கமான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய கிருபையால் மட்டுமே நம் உள்ளான மனுஷன் கிறிஸ்துவின் சாயலை அணிய முடியும். நாம் விசுவாசிகளாயிருக்கும் போது, "கர்த்தரின் நாம மகிமைக்காக வாழ்வதே" நமது குறிக்கோளாக வேண்டும்.

நம் சரீரம் அழிந்து போகக் கூடியது. மண்ணிலிருந்து எடுக்கப்பட்டோம்.  மண்ணிற்கே திரும்புவோம்.  ஆனால் நம் ஆவி, ஆத்தும நித்தியத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.  விசுவாச வாழ்க்கையில் வளர்ச்சி அடைந்து கொண்டேயிருக்க வேண்டும். நம் உடல் சிதைந்து போனாலும், கிறிஸ்துவின் சாயலைப் பெரும் வரை நம் உள்ளான மனிதன் புதுப்பிக்கப் பட்டு கொண்டே இருக்க வேண்டும்.

காணப்படுகிற அநித்தியமானவைகளையல்ல, காணப்படாத நித்தியமானவைகளையே உங்கள் கண்கள் நோக்கக்கடவது.  தேவன் நமக்காக வைத்திருக்கும் மகிமையை ஒப்பிடும் போது இவ்வுலகில் காணப்படுகிற உபத்திரவங்கள் அற்பமானதே.  எனவே, நாம் நம் சுயத்தை வெறுத்து, தினம் தினம் உள்ளான மனிதனில் புதுப்பிக்கப்பட்டவர்களாக, கிறிஸ்துவின் சாயலை பெற்று வாழ்வோம்.

ரோமர் 8 :18

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.

யாக்கோபு 1 :12

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

ஜெபம்:

அன்புள்ள கர்த்தாவே, நீர் என் மகிமையின் நம்பிக்கையாக இருப்பதற்காக ஸ்தோத்திரம்.  எங்கள் மாம்ச சரீரம் உருவழிந்து போனாலும், தினம் தினம் நாங்கள் புதிதாக்கப்பட்டவர்களாய் வாழ உதவி செய்யும்.  கஷ்டங்கள், சோர்வுகள் வந்தாலும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்து நின்று பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளும் இலக்கை நோக்கித் தொடர உதவி செய்யும்.  அழியாத நித்திய மகிமையைப் பெற்றுக் கொள்ளக் கிருபை புரியும் ஆமென். 


No comments:

Post a Comment