யோபு :8 :7
உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்த யோபுவுக்கு நேரிட்ட தீமைகளைக் கேள்விப்பட்ட அவனுடைய மூன்று சிநேகிதர்கள் அவனுக்காக பரிதபிக்கவும், ஆறுதல் சொல்லவும் வந்தார்கள். அவர்களில் பில்தாத் யோபு செய்த பாவத்தினிமித்தம் இந்த சோதனைகள் ஏற்பட்டது என்ற ரீதியில் இரக்கமற்றவராய் பேசினார். தேவனுடனான யோபுவின் உறவு சரியாக இல்லாததினால் யோபு தண்டிக்கப்பட்டிருப்பதாகவும், மனம் திரும்பினால் அவர் ஆசீர்வதிக்கப்படுவார் என்றும் கூறுகிறார்.
இந்த எல்லா துன்பங்களும், யோபுவும் அவன் பிள்ளைகளும் செய்த பாவத்தினிமித்தமே என்று கூறுகிறார். யோபுவிடம் நீர் சுத்தமும் செம்மையாய் இருந்தால் தேவன் அவரை விடுவிக்க விழித்துக் கொண்டு அவரை சம்பூரணமாய் ஆசீர்வதிப்பார் என்றும் கூறுகிறார். யோபு நீதிமானாக இருந்தும் தேவன் அவன் சோதிக்கப்படுவதற்கு சாத்தானின் கையில் ஒப்புக்கொடுத்தார். அதே போல் இன்றும் உத்தமமாய் கர்த்தருக்குப் பயந்து நீதியுள்ள வாழ்க்கை வாழும் எல்லோரும் செழிப்பான வாழ்க்கையைப் பெற முடியவில்லை. தேவன் சிலரை வளமாய் வாழ வழிவகை செய்திருக்கிறார். எல்லாரையும் அல்ல.
இப்பொழுது யோபு வாழ்க்கையில் ஒன்றுமில்லாத நிலையில், மனைவி தூஷண வார்த்தைகள் பேசி கைவிட்ட நிலையில் ஒரு அற்பமான சூழ்நிலையில் நிற்கிறார். இந்நிலையில் தான் பில்தாத் உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், பாவத்திலிருந்து மனம் திரும்பினால் முடிவு சம்பூரணமாயிருக்கும் என்றுக் கூறுகிறார்.
யோபுவின் நண்பர்கள் அடுக்கடுக்காக அவன் மேல் குற்றம் சாட்டினாலும் அவன் கர்த்தர் தனக்கு அனுப்பின சோதனையைக் குறித்து எந்த ஒரு வார்த்தையையும் கர்த்தருக்கு விரோதமாக பேசவில்லை. தன்னைக் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்த்தினார். வார்த்தைகளினால் கூட ஒரு பாவமும் செய்யவில்லை. இதைக் குறித்துக் கர்த்தரே சாட்சிக் கொடுத்தார். யோபு :42 :7 - என் தாசனாகிய யோபு பேசினது போல, நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றுக் கூறுகிறார்.
யோபுவின் இந்த தாழ்மையைப் பார்த்து கர்த்தர் முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும், இரண்டத்தனையாய் கொடுத்தார். முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.
அதே போல நம் வாழ்விலும் நாம் அற்பமான ஆரம்பத்தில் நின்று கொண்டிருக்கலாம். தொடங்கின நிலையில் இருந்து முன்னேறாமல் அதே இடத்தில் வாழ்க்கையில் ஒரு செழிப்பு இல்லாமல் இருக்கலாம். உறவுகளும், நண்பர்களும், குடும்பத்தாரும் கூட நம் இயலாமையினால் என்றும், ஏதோ நம் முன்னோர்களின் பாவத்தினால் தான் இந்நிலைமை என்றும் எள்ளி நகையாடலாம். அவர்கள் வார்த்தைகளினால் மனம் தளர்ந்து போக நீங்கள் இடம் கொடாதிருங்கள். அச்சூழ்நிலைகளில் யோபுவை நினைத்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் சன்மார்க்க நெறியிலிருந்து தவறிச் சென்றுவிடாதீர்கள். உத்தமத்தில் உறுதியாய் நிலைத்து நில்லுங்கள். உங்கள் முடிவு சம்பூரணமாயிருக்கும்.
யோபு கர்த்தரைக் கேள்வி கேட்டார். ஆனால் அவரைச் சந்தேகிக்கவோ, சபிக்கவோ இல்லை. நன்றி செலுத்தி கர்த்தரின் மகத்துவங்களைச் சொல்லிப் புகழ்ந்து கொண்டுதான் இருந்தார். முடிவிலே ஜெயத்தைப் பெற்றார். அதே போல் நம் சோதனைகள் எவ்வளவு பெரியவைகளாய் இருந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளக் கூடிய பெலத்தையும் கர்த்தர் தருவார். ஜெயக்கிறிஸ்து நமக்கும் சோதனைகளிலிருந்து ஜெயத்தைத் தந்தருளுவார்.
சகரியா:9 :12
நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
சங்கீதம் :84 :11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
ஜெபம்:
அன்புள்ள இறைவா, நீர் எங்கள் வாழ்வின் எல்லா சோதனைகளிலும் கூட நாங்கள் எங்கள் உத்தமத்திலே உறுதியாய் நிலைத்து நிற்க உதவி செய்யும். நீர் எங்களை வைத்திருக்கிற நிலையிலே நாங்கள் சந்தோஷமாய் வாழ உதவி செய்யும். எந்த சூழ்நிலையிலும் உம் அன்பிலே நாங்கள் நிலைத்திருக்கக் கிருபை புரியும். சோதனைகளைச் சந்தோஷமாய் சகிக்கக் கூடிய பெலனைத் தாரும். முடிவிலே ஜெயத்தைப் பெற்று உம்முடைய தாசர்களாய் வாழ உதவி செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment