எசேக்கியேல் :36 :26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
எசேக்கியேல் 36 - ம் அதிகாரம் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும் அதிகாரமாக காணப்படுகிறது. இஸ்ரவேலர் கலகம் பண்ணி, விக்கிரக ஆராதனை செய்து, கடவுளுக்கு விரோதமாக நடந்து கொண்டனர். ஆனால் இச்சூழலில் இருந்து மனம் திரும்பி கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழும் காலத்திற்கு கர்த்தர் அழைத்துச் செல்லும் காலத்தைப் பற்றி தீர்க்கதரிசிகள் அடிக்கடி தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கர்த்தர் ஒரு புதிய உடன்படிக்கை செய்வதாக தீர்க்கதரிசி கூறுகிறார். இஸ்ரவேலுடனான தனது புதிய உடன்படிக்கையில், கர்த்தர் தம் மக்களுக்கு 4 காரியங்களை வாக்கு பண்ணுகிறார்.
- · நவமான இருதயம்
- · புதிதான ஆவி
- · கல்லான இருதயத்தை நீக்குவார்
- · சதையான இருதயம்
மனித குலம் முழுமையும் பாவத்தில் சிக்குண்டு, சுயநலம் மிகுந்த ஆசைகளில் மூழ்கிக் கிடக்கிறது. பெருமை, ஆணவம், கீழ்ப்படியாமை, நன்றியில்லாத உணர்வு போன்ற குணங்கள் மிகுந்து கடவுளற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றது. ஆனால் கர்த்தர் தம்முடைய கிருபையினால், தம்முடைய புதிய உடன்படிக்கையில் அவர்களுக்கு புதிய இருதயம் மற்றும் புதிய ஆவி தருவதாக வாக்களிக்கிறார். பல ஆண்டுகளாக பாவச் சேற்றில் சிக்கி வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் கல்லான இதயத்தை அகற்றி சதையான இருதயத்தைக் கொடுப்பதாக கூறுகிறார். மேசியாவின் பிறப்பின் மூலம் இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது. கர்த்தரைப் பரிபூரணமாய் நம்பும் அனைவரும் இதற்கு சுதந்தரவாளிகள்.
கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இந்த புதிய இருதயத்தை பெற வாஞ்சியுங்கள். புதிய இருதயம் என்பது உள்ளான மனமாற்றத்தைக் குறிக்கிறது. அதன் மூலம் குணமாக்குதலையும், கடவுளின் ப்ரசன்னத்தையும் நாம் உணரலாம். பாவங்கள் நம்மைக் கவர்ந்திழுத்து, கடவுளிடமிருந்து நம்மை விலகிச் செல்லும் தருணங்களை உண்டாக்கும். ஆனால் நாம் அவருக்கு சொந்தமானவர்களாய் இருக்கும் போது, ஒவ்வொரு நாளும் நாம் புதுப்பிக்கப்பட்ட மனிதனாக வாழ புது ஆவியைக் கட்டளையிட்டு சதையான இருதயத்தைக் கொடுத்து கர்த்தரின் மகிமைக்காக வாழச் செய்வார்.
எசேக்கியேல் 11 :19
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
சங்கீதம் :51 :10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
ஜெபம்:
பரலோகத் தந்தையே, நீர் எங்கள் மேல் கிருபையாய் இருப்பதற்காய் நன்றி. இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை, இன்று நீர் எங்கள் வாழ்விலும் நிறைவேற்றிக்கொண்டிருப்பதற்காய் ஸ்தோத்திரம். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத ஆண்டவராய் இருப்பதாய் ஸ்தோத்திரம். உம் வழிகளில் நாங்கள் நடக்க உதவி செய்யும். பாதை மாறிச் செல்லாதபடிக்கு எங்களைப் பாதுகாத்தருளும். பழையவைகளைக் களைந்து போட்டு புது சிருஷ்டியாய் இருக்க உதவி செய்யும். கல்லான இருதயத்தை எடுத்து சதையான இருதயத்தைத் தாரும். எல்லா துதியும், கனமும், மகிமையும் உமக்கே தருகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment