கொலோசெயர்:3: 9 , 10
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசே பட்டணத்தில் உள்ள விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் சரிப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக சில அறிவுரைகளைக் கூறுகிறார். ஏனெனில் அவர்கள் முற்காலத்தில் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளோடு சஞ்சரித்த போது வாழ்ந்த பழைய வாழ்க்கையை நினைவு கூறுகிறார். அதைக் களைந்து போட அறிவுறுத்துகிறார்(கொலோசெயர்:3:5-7). விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக ஆராதனை போன்றவற்றை களைந்த விசுவாசிகள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
எவற்றை விட்டு விட வேண்டும்? கோபம், மூர்க்கம், பொறாமை, தூஷணமான வார்த்தை, வம்பு வார்த்தைகள் ஆகியவற்றை விட்டு விட வேண்டும்(கொலோசெயர்:3:8).
மேலும் புதிதாக்கப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் பொய் சொல்லக்கூடாது. நேர்மையானவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். பழைய செய்கைகளை களைந்து போட்டு கிறிஸ்துவின் சாயலுக்கொப்பான புதிய மனுஷனை தரித்துக் கொண்டிருக்கிற நாம் கிறிஸ்து நிரந்தரமாக நம்மில் நிலைத்திருக்கும் படியாய் வாழ்வோம். ஆதியில் ஏவாளிடம் சாத்தான் சொன்ன பொய் மனித குலம் வீழ்ச்சியடைய ஏதுவாயிற்று.
கர்த்தர் வெறுக்கிற ஒரு காரியத்தில் பொய் சொல்லுதலும் ஓன்று(நீதிமொழிகள்:6:17). நாவு கொடிய விஷம் நிறைந்த அவயவம் என்று யாக்கோபு கூறுகிறார்(யாக்கோபு:3:5,6). பொய் சொல்லுதல் மட்டுமல்ல பெருமையான வார்த்தைகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் நம் நாவிலிருந்து வெளிப்பட வேண்டாம்(எபேசியர்:4:29). நாம் பிறரிடம் கெட்ட வார்த்தைகள் பேசாதவர்களாய் இருக்கலாம். ஆனால் நம் பிள்ளைகளிடம் கோபத்தின் மிகுதியினால் வெளிப்படுத்துகிற வார்த்தைகளில் கவனமாய் இருப்போம். நம் வார்த்தைகள் ப்ரயோஜனமானதாயும், பக்தி விருத்திக்கு ஏதுவானவைகளாயும் அமையட்டும்.
நம் நாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் நாம் கர்த்தரிடம் கணக்கு கொடுக்க வேண்டும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். எனவே நம் சிந்தனைகளை பரிசுத்தமாய் காத்துக் கொள்வோம்.
பழைய மனுஷனைக் களைந்து புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிற நாம் பொய்யைக் களைந்து பிறனுடன் மெய்யைப் பேசக்கடவோம். கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாய் மாற முயல்வோம்.
கொலோசெயர் :3 :12
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
எபேசியர் : 4 :23 , 24
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள கர்த்தாவே, இந்த நாளிலும் நாங்கள் எங்கள் பழைய பாவ செய்கைகளை களைந்து போட உதவி செய்யும். நாங்கள் பிறருடன் மெய்யைப் பேச அருள் புரியும். உம் நாமத்திற்கு மகிமைக் குறைச்சலைக் கொண்டு வருகிற வார்த்தைகளை நாங்கள் பேசாதபடி எங்களைக் காத்துக்கொள்ளும். பிறரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் எங்கள் நாவிலிருந்து வெளிப்பட கிருபை செய்யும். புதிய மனுஷராய் உம் சாயலை தரித்துக் கொள்ள அருள் புரியும். ஆமென்.
No comments:
Post a Comment