நீதிமொழிகள்:1 : 7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
கர்த்தருக்குப் பயந்து நடப்பதன் மூலம் நாம் ஞானத்தைப் பெற்றுக் கொள்ளத் தொடங்குகிறோம் என்று நீதிமொழிகள் கூறுகிறது. பலர் கற்றுக் கொள்ளத் தயாராகவும், விருப்பத்துடனும், ஆர்வமாகவும் இருப்பர். ஆனால் அவர்கள் அனைவரும் ஞானவான்கள் என்று கூறமுடியாது. நம் குழந்தைகள் கல்வி கற்பதற்கு முன்னர் நாம் என்ன சொல்லித் தருகிறோம்? கர்த்தருக்கு பயந்து நடந்தால் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். படிக்கின்ற பிள்ளைகளும் சரி, நாமும் சரி கர்த்தருக்குப் பயந்து நடக்கும் போது தேவையற்ற காரியங்களைச் செய்ய இடம் கொடுக்கமாட்டோம். நல்லது எது தீயது எது என்று பகுத்தறியக் கற்றுக்கொள்வோம். நேரத்தை வீணாக்க மாட்டோம். அப்படி நடக்கும் போது நாம் தானாக ஞானத்தின் பாதையில் செல்ல ஆரம்பித்திருப்போம். இது உலக பிரகாரமாக நாம் பெற்றுக் கொள்ளும் ஞானத்தின் ஆரம்பம்.
நம் ஒவ்வொருவருடைய வாழ்வின் அடித்தளம் கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்கு பயந்து வாழ்வதில் கட்டப்பட்டிருக்க வேண்டும். கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது அவர் மீது நாம் கொண்டிருக்கும் பயபக்தி, கற்பனைகளை மதித்து நடத்தல், எல்லா நிலையிலும் அவருக்கு மகிமை செலுத்தி வாழ்தல் எனக் கூறலாம்.
பிதாவாகிய தேவன் தம் ஒரே பேறான குமாரனை பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனுக்குலம் இரட்சிப்படைய சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். இயேசு கிறிஸ்து மரித்து உயிரோடெழுந்ததின் மூலம் நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற்ற விசுவாசிகளுக்கு, தாழ்மையான ஒரு இருதயத்தோடு கர்த்தரைத் தொழுது கொள்வதும், கர்த்தர் நமக்காக இலவசமாய் தந்த இரட்சிப்புக்காக நன்றி சொல்வதும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயமே.
இன்றைய உலகில் அறிவு மிகுந்து காணப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்கள் கூட அறிவாற்றல் மிகுந்து காணப்படுகின்றனர். ஆனால் ஞானம் என்பது அந்த அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதாகும். அந்த ஞானத்தை கர்த்தர் ஒருவரே நமக்குத் தரமுடியும். அதற்கு நாம் கர்த்தருக்குப் பயந்து வாழ வேண்டும். இல்லையென்றால் எப்பேர்ப்பட்ட அறிவுடையவர்களாய் இருந்தாலும் நமக்கு ஞானம் இல்லை என்றால் நம் வாழ்வு கட்டப்படாது.
எனவே கர்த்தருக்குப் பயப்படுவதன் மூலம் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீதிமொழிகள் : 9 :10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
பிரசங்கி:12 :13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
ஜெபம்:
அன்புள்ள பிதாவே, நீர் என் மேல் வைத்திருக்கிற அன்புக்காய் நன்றி. நீர் எனக்கு இலவசமாய் தந்த இரட்சிப்புக்காய் நன்றி. பாவத்தையும், நீதியையும், நியாயத்தையும் குறித்து உணர்த்தி உமக்கு பயப்படும் வாழ்வை நான் வாழ வழிகாட்டியதற்காய் நன்றி. உமக்கு பயப்படுவதன் மூலம் ஞானத்தோடு என் வாழ்வைக் கட்டியெழுப்ப உதவி புரியும். என்றென்றும் தாழ்மையான இருதயத்தோடு, பயபக்தியோடு, இறுதிவரை ஆவியோடும் உண்மையோடும் உம்மைத் தொழுது கொண்டு வாழ உதவி செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment