பிரசங்கி :3 :11
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
இவ்வசனத்தின் முதல் பகுதி அநேக கிறிஸ்தவ திருமணப் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருப்பதை நாம் அறிவோம். குடும்பத்திலே ஒரு சந்தோஷமான தருணத்தைக் கர்த்தர் தந்திருக்கிறார், ஒரு திருமணம் நிச்சயிக்கப்படுத்தல் என்பது ஆசீர்வாதமான ஒரு நிகழ்வு, அதனைக் கர்த்தர் ஏற்ற காலத்தில் எங்கள் குடும்பத்தில் தந்திருக்கிறார் என்று சாட்சி பகர்வதுதான் அவ்வசனம்.
அதே போல பிரசங்கி : 3 :1 - 8 வரையுள்ள வசனங்களை நாம் பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது என்பது பிரசங்கியின் வாக்கியங்கள். இந்த வசனங்களை வாசிக்கும் போது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை விதமான சூழ்நிலைகளைக் கடந்து சொல்லுகிறான் என்று பார்க்கிறோம். வாழ்க்கை என்றும் சமனான பாதை வழியாக ஒரே நேர்கோட்டில் செல்வதில்லை. ஒரு மனிதனுடைய வாழ்வில் ஏற்றம், இறக்கம், வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம் ஆகியவை வந்து வந்து போகும். நல்ல சூழ்நிலைகளும் வரலாம், சோகமான துன்பமான சூழ்நிலைகளும் நேரிடலாம்.
நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கர்த்தரின் சித்தத்திற்கு உட்பட்டு தான் நகருகிறது. எனவே கர்த்தர் ஏன் இதைச் செய்தார், எதற்காகச் செய்தார், எப்பொழுது இதைச் செய்வார், எவ்வாறு செய்வார் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது நம்மால் முடியவும் செய்யாது. நம்மை நித்தியத்திற்கு அழைத்து செல்லும் பாதையில் கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை, சோதனைகளுமே என்று நாம் புரிந்து கொண்டால் போதும்.
ஆசீர்வாதங்கள் கிடைக்கும் போது சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுகிற நாம் சோதனைகள் வரும் போதும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆதி முதல் அந்தம் வரை நடக்கும் எதையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கர்த்தருடைய மகிமையை அனுபவிப்பதே நம் குறிக்கோளாகட்டும். எதிரியானவன் ஜெயிக்க ஒரு போதும் இடம் கொடாதீர்கள். நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும் போது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் அர்த்தமுள்ளதாக அமையும்.
கலங்காதிருங்கள் நாம் காத்துக்கொண்டிருக்கும் தருணங்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியானதொரு ஆசீர்வாதமாக அவர் நியமித்த காலத்தில் கிடைக்கும். எந்த ஒரு தவறும் ஏற்பட்டு விடாதவாறு கர்த்தர் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். Not everything is beautiful but God has made everything beautiful in its time.
நாம் மோசமான சூழ்நிலையில் இருந்தாலும் ஏற்ற நேரத்தில் கர்த்தர் விரும்பும் வழியில், நன்மையாகவும், அழகாகவும் அச்சூழ்நிலையை மாற்ற அவரால் மட்டுமே முடியும். நம் பொருளாதாரம் மோசமாக இருக்கலாம், நாம் நோயினால் கஷ்டப்படலாம், நம் உறவுகள் சரியாக அமையாமலிருக்கலாம், பிள்ளைகளால் வருந்த நேரிடலாம், எதிர் காலமே கேள்விக்குறியாக இருக்கலாம். கலங்க வேண்டாம், உடைந்த உள்ளத்தோடு உடைந்த பாத்திரமாக கர்த்தரை நம்புவோம். அழகானப் பாத்திரமாக ஏற்ற நேரத்தில் நாம் வனையப்படுவோம். கர்த்தர் எல்லாவற்றையும் அதினதின் காலத்திலேயே நேர்த்தியாகச் செய்வார்.
பிரசங்கி :8 :17
தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
உபாகமம் 32 :4
அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
ஜெபம்:
அன்புள்ள கர்த்தாவே, எங்கள் வாழ்வில் நாங்கள் கடந்து வரும் எல்லா சூழ்நிலைகளிலும் நீர் செயலாற்றிக் கொண்டிருக்கிறீர் என்பதைப் புரிந்து கொள்ள உதவி செய்தீர். உம்மிடத்திலிருந்து நன்மையான காரியங்களைப் பெற்றுக்கொள்ள நாங்கள் நேர்த்தியான காலம் வரைக் காத்திருக்க உதவி செய்யும். எங்களுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்திற்கு உட்பட்டு வாழ கிருபை புரியும். ஆமென்.
No comments:
Post a Comment