Tuesday, January 12, 2021

முந்தினவைகள் நினைக்கப்படுவதில்லை

 


ஏசாயா: 65 :17

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

ஏசாயா 65 -ம்  அதிகாரத்தின் தொடக்கத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் முந்தின காலத்தில் பண்ணின முரட்டாட்டங்களையும், அவர்கள் மேல் கர்த்தர் கொண்டு வந்த நீதியான நியாயத்தீர்ப்பு பற்றியும் கூறப்பட்டுள்ளது.  ஆனால் இந்த வசனத்தில் கர்த்தரின் தொனி மாறுபடுகிறது.  முரட்டாட்டமும், கலகமும் பண்ணினவர்களுக்கு மீட்பை வாக்குப்பண்ணுகிறார்.  முந்தின இடுக்கண்கள் என் கண்களுக்கு மறந்து போயின எனக் கர்த்தர் கூறுகிறார். என்னே ஒரு சந்தோஷமான வார்த்தை. 

பிள்ளைகள் தவறு செய்து பெற்றோர் தண்டிக்கும் போது அவர்கள் முகம் பயத்தால் நிறைந்து காணப்படும்.  ஆனாலும் தண்டனைக்குப் பின்னர் "பரவாயில்லை போ" என்ற ஒரு வார்த்தை அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷக் களையைக் கொண்டு வந்து விடும்.  தண்டனைக்குப் பின்னர் பெரும் மன்னிப்பின் சந்தோசம் அளவில்லாதது.  அப்படி ஒரு சந்தோஷத்தைத் தான் கர்த்தர் இஸ்ரவேலருக்கு இவ்வசனத்தின் மூலம் அருளுகிறார்.

பாவத்திற்கு தண்டனைப் பெற்றாகிவிட்டது.  கர்த்தர் பாவங்களை மறந்து விட்டார்.  இப்பொழுது அவர்கள் இழந்த செல்வங்களை, சந்தோஷங்களை மீட்டெடுக்க கர்த்தர் ஆயத்தமாகிறார்.

பாபிலோனுக்கு சிறைப்பட்டு போய் எருசலேமுக்கு திரும்பி வந்தவர்களுக்கு இவ்வாக்குறுதி அளிக்கப்படுகிறது.   பல ஆண்டுகள் கடந்து விட்டது.  எருசலேமின் சுவர்களும், ஆலயமும் புனரமைக்கப் பட்ட போதிலும் நகரத்தின் பெரும்பகுதி இடிந்து கிடக்கிறது.  புதிய ஆலயமும் பாபிலோனியர்கள்  அழித்துப் போட்ட பழைய ஆலயத்தின் ஒரு நிழலாய் மாத்திரம் இருக்கிறது.  அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய தேசத்தில் வாழ்ந்ததை விட கடினமான சூழலில் வாழ்கிறார்கள். கர்த்தர் தங்களுக்கு இந்த எருசலேம் நகரத்தை பழைய மகிமைப் பொருந்திய எருசலேம் நகரமாக மாற்றித் தருவாரா என்று நினைத்து கவலைப்பட்டார்கள். ஏசாயா 63,64-ம் அதிகாரங்களில் அவர்கள் கவலைகள் பிரதிபலிக்கின்றன. அவை யாவும் இந்த வசனத்தில் முடிவடைகின்றன.

துன்பங்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து மட்டுமல்ல, கர்த்தர் ஒரு புதிய உலகத்தையே படைப்பதாக வாக்குக்கொடுக்கிறார். பிதாவானவர் தம் குமாரனை அனுப்புவதன் மூலம் புது சபைகள் எழுப்பப்பட்டு பரிசுத்த ஆவியானவர் அபரிதமாக ஊற்றப்படுவார் என்று இவ்வசனம் கூறுகிறது. மேலும் தம் மக்களுக்கு கர்த்தர் அருளும் ஆசீர்வாதங்கள் ஏசாயா 65 - ம் அதிகாரம் பிந்தைய வசங்களில் காணப்படுகிறது.  மகிழ்ச்சியுடன் வாழ்ந்து சுகித்திருக்கும் ஆசீர்வாதம் அருளப்படுகிறது.

அது போல நம் வாழ்விலும் நாம் செய்த பாவங்களுக்கும், நம் முரட்டாட்டமான குணங்களுக்கும் தக்கதான தண்டனையைப் பெற்றிருக்கலாம்.  இதினிமித்தம் நம் வாழ்வு கட்டப்படாமல் இருக்கலாம். மனம் திரும்பி கர்த்தரண்டை வாருங்கள். அவர் நம் பாவங்களை நினையாமல், நம்மை மன்னித்து நமக்கு புது வாழ்வு அருளக் காத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் கர்த்தர் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கும் நித்திய வாழ்வில் கண்ணீர், கவலைகள் இன்றி நித்திய நித்தியமாய் ஆண்டவரோடு வாழ்வோம். 

2 பேதுரு 3:13

அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

ஏசாயா:66:22

நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஜெபம் :

அன்புள்ள இறைவா, இஸ்ரவேல் மக்களை அவர்கள் சிறையிருப்பினின்று திருப்பி தங்கள் சொந்த தேசத்தில் மகிழ்ச்சியுடன் வாழ கிருபை செய்தீர், அவர்கள் பாவங்களை நினையாமல் மறந்துவிட்டீர். அதே போல் எங்கள் பாவங்களையும், அக்கிரமங்களையும் தயவாய் மன்னித்து எங்கள் வாழ்வு கட்டப்பட உதவி செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோகில் நாங்கள் நித்திய நித்தியமாய் உம்மோடு வாழும் பாக்கியத்தை அருளிச் செய்யும்.  இயேசுவின் நாமத்தில் ஆமென்.


No comments:

Post a Comment