ரோமர் :6:4
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ஆதாம், ஏவாளை சர்ப்பம் வஞ்சித்ததின் மூலம் மனுக்குலம் பாவத்தில் விழுந்தது. ஆனால் கிருபையானது பாவத்தில் மரித்து கிடந்த நம்மை உயிர்ப்பித்தது. நம்மிலிருந்த பாவ மனிதன் மறித்து கிறிஸ்துவுடனே கூட கிருபையாலே நாமும் உயிர்ப்பிக்கப்பட்டு புதிய ஜீவனுள்ளவர்களாயிருக்கிறோம்.
நாம் கிறிஸ்துவுக்குள்ளாக உயிர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக பாவ இருள் அகன்று கிறிஸ்துவுடன் கூட ஞானஸ்நானத்தினாலே ஒன்றாக்கப்படுகிறோம். பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளாக, பரலோகத்தின் அவகாசிகளாக மாறுகிறோம். ஞானஸ்நானமானது நமது உள்ளான மனுஷனில் ஏற்பட்ட மாற்றத்தை பறைசாற்றக்கூடியதாய் இருக்க வேண்டும். விசுவாசத்தினாலே கிருபையின் மூலம் நம் சுயம் மரித்து கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை வாழ்கிறவர்களாய் இருக்க வேண்டும்.
கிறிஸ்து பிதாவின் மகிமையால் மரித்தோரிலிருந்து எழுந்து வெற்றி சிறந்தது போல நாமும் புது ஜீவனுள்ளவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். பாவத்துடனான உறவை முற்றிலும் துண்டித்து கிறிஸ்துவுடன் கூட முற்றிலும் புதிய நித்திய ஐக்கியத்திற்குள்ளாக வைக்கப்படுகிறோம். புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல பரிசுத்தமானவர்களாய் வாழ்ந்து காட்டுவோம்.
ஒரு நாள் மட்டும் பரிசுத்தவானாய் அல்ல தினம் தினம் நம் வாழ்நாள் முழுவதும் பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும். இதை மட்டுமே கர்த்தர் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார்.
ரோமர் :8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
1 பேதுரு:3:21
அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.
ஜெபம்:
பரலோகத் தகப்பனே, நீர் எங்களை கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சித்ததற்காய் நன்றி. பாவத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த என்னை உம்முடைய மரணத்தின் மூலம் பாவத்திற்கு மரிக்க உதவி செய்தீர். புதிய படைப்பாய், புதிய ஜீவன் தந்து நீதிமான்களாக்கினதற்காய் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் தினம், தினம் பரிசுத்தமாக்கப்பட்டு வாழ உதவி புரியும். எல்லா துதியும், கனமும், மகிமையும் உமக்கே உரித்தாகட்டும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.
No comments:
Post a Comment