Thursday, January 14, 2021

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

 


மத்தேயு:7:7,8

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

கேளுங்கள் - கொடுக்கப்படும். தேடுங்கள் - கண்டடைவீர்கள், தட்டுங்கள் - திறக்கப்படும். இவ்வசனத்தை மையமாக  வைத்து நாம் ஜெபத்தின் என்ன கேட்டாலும் கிடைக்கும் என்று போதிக்கப்படுகிறது.  இயல்பாகவே, ஒரு பொருள் இன்னொருவரிடம் நமக்குத் தேவையென்றால் அவர்களிடம் நாம் வாய் திறந்து கேட்டாக வேண்டும்.  அதே போல் தொலைந்து போன பொருளைத் தேடினால் தான் அதைக் கண்டுபிடிக்க முடியும்.  மேலும் மூடியிருக்கிற கதவைத் தட்டினால் தான் அக்கதவு திறக்கப்படும்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் சீஷர்கள் பின்பற்ற கொடுக்கப்பட்ட நடைமுறைகள் தான்.  அதை அவர்கள் விசுவாசிகள் பின்பற்றும்படி அழகாக கிறிஸ்துவினால் உந்தப்பட்டு கற்பனைகளாக, வேதப்புத்தகமாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசுவாசிகள் என்ன போதிக்கப்பட்டிருக்கிறார்கள்நம் சத்தத்தை உயர்த்தி, நீண்ட ஜெபம் செய்து, விடாப்பிடியாக கர்த்தரிடம் நம் விண்ணப்பத்தை ஏறெடுத்தால் அவர் பதிலளித்துவிடுவார் என்று போதிக்கப்பட்டிருக்கிறோம்.  இப்படி செய்கின்ற எல்லா ஜெபங்களுக்கும் நாம் எதிர்பார்க்கிற பதில் கிடைக்கும்  என்பது நிச்சயமல்ல.  நாம் கேட்கும் அனைத்தையும் கர்த்தர் நமக்கு வழங்க விடும் என்று அவரை நாம் கட்டாயப்படுத்திடுவதும் சரியல்ல.

நாம் ஜெபிக்கும் பொது விசுவாசத்தோடு, பரிசுத்தமான உள்ளத்தோடு ஜெபிக்க வேண்டும்.  நம் உள்ளத்தில் அக்கிரம சிந்தைக் கொண்டிருந்தோமானால், நீண்ட நேரம் இடைவிடாமல் விடாப்பிடியாக போராடினாலும் கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டார்(சங்கீதம்:66:18 - என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.)

மேலும் நம் ஜெபம் சுயநலம் சார்ந்ததாய் இருக்கக் கூடாது.  தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டு ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  முழு விசுவாசத்துடன் நம் ஜெபம் காணப்பட வேண்டும்.  இப்படிச் செய்யப்படும் ஜெபத்திற்கு கர்த்தர் நிச்சயம் பதிலளிப்பார்.

மேலும் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கு மாதிரியாக பரமண்டல ஜெபம் காணப்படுகிறது - மத்தேயு:6:9-13.  எனவே கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றி, அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும் போது கர்த்தர் நம் ஜெபத்திற்குப் பதிலளிப்பார். கிறிஸ்துவை உங்கள் வாழ்வில் கிரியை செய்ய அனுமதியுங்கள்.  நம் சுயபெலத்தை சார்ந்து நில்லாமல் கர்த்தரைச் சார்ந்து நிற்போம்.  கர்த்தர் இயற்கைக்கு அப்பாற்பட்டு நின்று செயலாற்றுவார். 

நம் வாழ்வில் நாம் விரும்புகிறக் காரியங்களை செய்யவும், நிர்ணயித்த இலக்குகளை அடையவும் கர்த்தரின் துணையின்றி செயல்பட்டால், நம் நம்பிக்கைகளும், கனவுகளும் சிதைந்துவிட வாய்ப்புண்டு. எதைச் செய்தாலும், கேட்டாலும் கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துக் கேளுங்கள். நமக்கு நன்மையானதை நாம் கர்த்தரின் கரத்திலிருந்து பெற்றுக்கொள்வோம்.

கடைசியாக, இயேசு கிறிஸ்து உங்கள் இரட்சகராக இருக்கக் கேளுங்கள்.  அவருடைய நீதியையும், நியாயத்தையும் தேடுங்கள்.  கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் கதவு திறக்கப்படத்  தட்டுங்கள்.

1 யோவான் 3:22

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

யோவான் 15:7

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

ஜெபம்:

அன்புள்ள இறைவா, எங்கள் விண்ணப்பங்களை உம்முடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தூய சிந்தையுடன் உம்மிடம் ஏறெடுக்க வேண்டும் என்ற போதனையை நீர் தந்ததற்காக நன்றி.  உம் சித்தத்திற்கு உட்பட்டு வாழவும், ஜெபிக்கவும் உதவி செய்யும். உம் தூய நாம மகிமைக்காக ஒவ்வொரு நொடிப்பொழுதும் செயல்பட உதவிச் செய்யும்.  நாங்கள் கேட்பதற்கு முன்னமே எங்கள் தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர். உம்மை அறிகிற அறிவிலும், கிருபையிலும் வளர்ந்து பெருகி நீர் காட்டும் பாதையில் பரிசுத்த ஆவியின் துணையோடு நடக்க உதவி புரியும்.  இயேசுவின் நாமத்தில் ஆமென்.




No comments:

Post a Comment