சங்கீதம்:73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
இஸ்ரவேல் ஜனக்கூட்டத்தின் பாடகர் குழுவில் ஒரு தலைவராக இருந்த ஆசாப் என்பவர் சங்கீதா 73 - ஐ எழுதினார். சங்கீதங்களை இயற்றும் திறமை உடையவராகவும் இருந்தார். இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராக இருக்கிறார் என்று ஒப்புக்கொள்ளுகிறார். ஆனாலும் துன்மார்க்கர் செழித்திருப்பதை பார்த்து சங்கீதக்காரன் சோர்வு கொள்ளுகிறார். தீயர் வாழ்ந்து சுகித்திருப்பதைப் பார்த்து சற்றே விசுவாசத்தில் தள்ளாடுகிறார். பொறாமை கொள்ளுகிறார்.
துன்மார்க்கர் இவ்வாறான வாழ்க்கை வாழும் போது தேவனுக்கு பயந்து வாழ்கிறவர்களுக்கு ஏன் துன்பங்கள் வருகிறது என்ற கேள்வி ஆசாபின் மனதில் எழுகிறது. இன்றைய நாட்களில் பலரும் கேட்கும் கேள்வி இது. துன்மார்க்கரின் வாழ்க்கையைக் குறித்ததான பல காரியங்களைக் கூறிக்கொண்டே வருகிறார். ஆனால் 15-ம் வசனம் முதல், அவரது அணுகுமுறை மாறுகிறது. தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்ற போது தன் பார்வை தவறானது என உணர்த்தப்பட்டார். சுகித்து வாழ்ந்திருக்கும் துன்மார்க்கரின் முடிவு பயங்கரமானது என்பதை உணர்ந்து கொண்டார்.
துன்மார்க்கருடைய வாழ்வு ஒரு நொடிப்பொழுதில் பனியைப்போல் காணாமல் போய்விடும். ஆனால் கர்த்தரைத் தங்கள் பங்காகத் தெரிந்து கொண்டவர்களோ, அவருடைய பலத்த கரத்திற்குள் சுகமாய்த் தங்கியிருப்பார்கள். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு இவ்வுலகின் துன்பங்கள் பெரிதாகத் தோன்றலாம். ஆனால் அவைத் தற்காலிகமானதே. கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பரலோக மகிமையை ஒப்பிடும் போது இந்த துன்பங்கள் ஒன்றும் பெரிதல்ல.
நம்முடைய மாம்சமும், இருதயமும் உலகத்தார் வாழும் வாழ்க்கையைப் பார்த்து பொறாமை கொள்ளலாம். எரிச்சலடையலாம். ஆனால் இந்த மாம்மும் இருதயமும் ஒரு நாள் மாண்டு மண்ணோடு மண்ணாகப் போய் விடும். கர்த்தரைத் தங்கள் கன்மலையாகவும், பங்காகவும் கொண்டவர்கள் மட்டுமே மகிமையில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
கர்த்தர் மாறாதவர். அவர் மேல் முழு விசுவாசம் வைத்து நித்தியத்தின் பாதையை நோக்கி முன்னோக்கிச் செல்வோம். கர்த்தர் தம்முடைய மாறாத இரக்கத்தால், அன்பின் மிகுதியால் நம்மை மீட்டுத் தம் சொந்தப் பிள்ளைகளாக்கியிருக்கிறார். எனவே தேவனை அண்டிக்கொள்வோம். அவருடைய கிரியைகளை குறித்து பிறருக்குச் சொல்வோம். கர்த்தரை நம் பங்காக்கிக் கொள்வோம்.
சங்கீதம்:16 :5 ,6
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
சங்கீதம்: 119 :57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
ஜெபம்:
அன்புள்ள பிதாவே, துன்மார்க்கர் வாழ்ந்து சுகித்திருந்தாலும் அவர்கள் முடிவு அழிவு என்பதை உணர்த்தியதற்காய் நன்றி. உலகத்தாரின் வாழ்வைப் பார்த்து நாங்கள் பொறாமைக் கொண்டு, எங்கள் விசுவாசத்தில் நாங்கள் குன்றிப் போகாதவாறு காத்தருளும். நீர் எங்களுக்குப் பாராட்டிவரும் எல்லா கிருபைகளுக்கும், நன்மைகளுக்கும் நாங்கள் தகுதியுள்ளவர்களாகக் காணப்பட உதவி புரியும். உம்மை எங்கள் கன்மலையாகவும் பங்காகவும் கொண்டு இவ்வுலக ஓட்டத்தை வெற்றியோடு முடிக்க உதவி செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment