Saturday, January 16, 2021

இலக்கை நோக்கித் தொடருகிறேன்

 


பிலிப்பியர் : 3 :13 , 14

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

கிறிஸ்தவர்களாகிய நாமும் கிறிஸ்துவைப் போல வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம்.  ஆனாலும் பல இடங்களில் தவறு செய்கின்றோம்.  நம்முடைய அழைப்பு எது என்பதையும் மறந்து விடுகிறோம்.  ஒவ்வொருவரும், ஒவ்வொருவிதத்தில் குறைவுள்ளவர்களே.

கிறிஸ்துவை நம் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளுகிறோம்.  கிறிஸ்துவுக்குள்ளாக மறுபடியும் பிறக்கும் போது அவருடைய கிருபையிலும், அவரைப் பற்றிய அறிவிலும் வளர்ந்து பெருக வேண்டும்.  பரிசுத்தமாக்கப்படுத்தல் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.  நம்முடைய நோக்கம் பரம அழைப்பின் பந்தய பொருளை பெறுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு விசுவாசிக்கும் கர்த்தர் ஓரி ஓட்டத்தை நியமித்திருக்கிறார்.  கிறிஸ்துவை அறிந்த ஒவ்வொருவரைக் குறித்தும் அவருக்கு ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தைக் குறித்த ஒவ்வொரு செயற்பாடுகளையும் நம் பரம பிதாவே திட்டம் பண்ணியிருக்கிறார்.  நாம் அவர் சித்தத்திற்குள்ளாக நடப்பதற்கும், அவரைப் பிரியப்படுத்தி வாழ்வதற்கும் அவரே நம்முள் கிரியை செய்கிறார்.

மனிதனின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால், ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்து காணப்படுகிறது. இரண்டு பேருடைய வாழ்வு ஓன்று போல் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கு அவரவருக்கு ஏற்றார் போல் பிரச்சனைகள், ஏமாற்றங்கள், சவால்கள் உண்டு.  ஆனாலும் நாம் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் வெவ்வேறான திறமைகள், ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையைக் கொடுத்திருக்கிறார்.  எந்த சூழ்நிலையில் நம் வாழ்வு இருந்தாலும் நம் லட்சியம் ஒன்றே. கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும்.  நானல்ல கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் என்று சொல்லுமளவிற்கு நம் வாழ்க்கையில் நம் சுயம் வெறுக்கப்பட வேண்டும்.

நம்முடைய மாம்சம் நம்மை பாவத்திற்கு நேராக வழிநடத்தி நாம் வழி மாறச் செய்துவிடும்.  நம் அழைப்பின் நோக்கம் கிறிஸ்துவை நோக்கி ஓடுதல் என்று நம் மனது சொன்னாலும், நம் அழிந்து போகின்ற  இச்சரீரம் பல நேரங்களில் தடுமாறுகிறத்து. அதன் விளைவாக தோல்விகள், ஏமாற்றங்கள் வரலாம்.  சந்துருவின் சதிவலையில் சிக்கி விழுந்து விடாதிருங்கள். பழைய பாவ வாழ்க்கை, தோல்விகளை திரும்பி நோக்காதிருங்கள்.

பவுல், சவுலாக இருந்த போது சபைகளைத் துன்புறுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.  ஸ்தேவானை கல்லெறிந்து கொல்வதில் முன்னால் நின்றார்.  அவர் அதற்காகப் பின்னாளில் வெட்கமும், வேதனையும் அடைந்திருக்க வேண்டும்.  ஆனாலும் அவர் பவுலாக மாறின பின்பு தான் அழைக்கப்பட்ட நோக்கத்தில் உறுதியாய் இருந்தார்.  எத்தனையோ வேதனைகள், அடிகள், கப்பற்சேதங்கள், சிறைவாசம் இவற்றின் மத்தியிலும் உறுதியாக நின்று சபைகள் கட்டப்படுவதற்கு தூணாக நின்றார்.

அதே போல் கர்த்தர் நியமித்திருக்கும் இலக்கை நோக்கி ஓடி தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வோம். 

சங்கீதம்  27 :4

கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

1 கொரிந்தியார் :9: 24,25

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

ஜெபம்:

அன்புள்ள கர்த்தாவேஇவ்வுலக வாழ்வில் எங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள உதவினீர்.  உம்முடைய அன்பிலும், கிருபையிலும் வளர்ந்து பெருகி நாங்கள் தினம், தினம் பரிசுத்தமாக்கப்பட அருள் புரியும்.  பவுலைப் போல நாங்கள் வைராக்கியமாக உமக்காக வாழ உதவி செய்யும்.  பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி ஆவலாய் தொடரக் கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.


No comments:

Post a Comment