ஏசாயா : 40 :31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஏசாயா 40 - ம் அதிகாரம் முழுவதும் புறஜாதிகளுக்கும், யூதர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கிற வசனங்களை வாசிக்கிறோம். இஸ்ரவேலர் தங்கள் தீயவழிகளை விட்டு மனம் திரும்பாவிட்டால், வரும் தண்டனையைக் குறித்து ஏசாயா பல முறை எச்சரிக்கிறார். முந்தைய அதிகாரங்களில் இதைக் காணலாம். அதன் பின் அவர்களை ஆறுதல்படுத்தும் வண்ணம் இவ்வார்த்தைகளை இஸ்ரவேலருக்கு வழங்குகிறார். இவ்வார்த்தைகள் இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல, இன்று நமக்கும் நம்பிக்கைத்தருகிற வார்த்தைகளாக இருக்கின்றன. நம் பாவங்களிலிருந்து விலகி, கர்த்தரை முழு இருதயத்தோடு நம்பி வாழ அழைக்கப்படுகிறோம். நம் சுயம் சாராமல் தேவனை சார்ந்து வாழக் கற்றுக்கொள்வோம்.
காத்திருத்தல் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஓன்று அல்ல. அது இதயத்தை இளைக்கப்பண்ணுகிற ஓன்று. விரக்தியையும் பொறுமையின்மையையும் அடைகிறோம். இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காத்திருக்குதல் உண்டு. கர்த்தர் ஏசாயா தீர்க்கன் மூலம் ஆறுதலான வார்த்தைகளை அளிக்கிறார். காத்திருந்து, காத்திருந்து சோர்ந்து போய், பெலனில்லாமல், சத்துவமில்லாமல் போயிருக்கலாம். இளைஞர், வாலிபர் கூட இளைப்படைந்து இடறி விழுந்திருக்கலாம்.
ஆனால் கர்த்தரின் வார்த்தைகளை நம்பி, அவரில் விசுவாசத்தோடு காத்திருக்கிறவர்களுக்கு புது பெலன் கிடைக்கும். சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வார். நம் பலவீனத்தில் அவருடைய பலம் பூரணமாய் விளங்கும். பலவீனங்களை கர்த்தரின் பாதத்தில் வையுங்கள். கர்த்தர் நமக்கு வைத்திருக்கும் ஜீவ நீரூற்றிலிருந்து பருகி வளர உதவி செய்வார். கர்த்தரோடு நெருங்கி வளரும் போது கழுகுகளை போல புது பெலன் தருவார்.
கர்த்தருக்கு காத்திருங்கள். அப்பொழுது அவர் நம் கடமைகளை செவ்வனே செய்யவும், சாத்தானின் சோதனைகளை ஜெயிக்கவும், அநீதி நிறைந்த உலகில் உண்மையாய் வாழவும், அனைத்தையும் பொறுமையாய் சகித்துக் கொள்வதற்கும், இறுதி வரை கர்த்தருக்காய் காத்திருந்து, அவர் தம் தூதர்களோடு ஆரவாரமாய் வரும் போது அவரை சந்தோஷமாய் எதிகொள்ள உதவி செய்வார்.
சங்கீதம் : 103 :5
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.
சங்கீதம் : 27 : 14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
ஜெபம்:
அன்புள்ள ஏசுவே, நாங்கள் எங்கள் தீய வழிகளை விட்டு மனம் திரும்பி உம்முடைய வழி நடத்துதலுக்காக உம் பாதத்தில் காத்திருக்கிறோம். எங்களுக்கு பெலனும் சத்துவமும் தந்து நடத்தும். சோர்ந்து போகாமல் உம் சமூகத்தில் காத்திருக்கக் கூடிய விருப்பத்தைத் தாரும். கழுகுகளை போல புது பெலன் அடைந்து எங்கள் பெலவீனங்களை, சோதனைகளை மேற்கொள்ள உதவி செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment