Saturday, January 2, 2021

முந்தினவைகளை நினைக்கவேண்டாம்


ஏசாயா :43:18,19

முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

நம் எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது.  சிலருக்கு அதில் சந்தோஷமான பக்கங்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு துன்பங்கள், நோய்கள், தவறுகள் போன்றவற்றால் அப்பக்கங்களில் சோகம் நிறைந்திருக்கும்.  அவற்றை திரும்பிப் பார்க்கக் கூடாது என்றிருந்தாலும் பலர் கடந்த கால வாழ்க்கையை நினைத்து, செய்த தவறுகளை நினைத்து குற்ற உணர்ச்சியினால், கவலையினால் நிகழ் காலத்தை தவற விட்டு விடுகின்றனர்.

கர்த்தர் ஏசாயாவிடம் முந்தினவைகளை நினைக்கவும், பூர்வமானவைகளை சிந்திக்கவும் வேண்டாம் என்று கூறுகிறார். தேவனிடம் மன்னிப்பு கேட்டு குற்ற உணர்ச்சிகளில் இருந்து விடுபடுங்கள். தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் புதிய காரியங்களை ஏறெடுத்துப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

எதற்கும் உதவாத என்னை கர்த்தர் பயன்படுத்துவாரா என்று சந்தேகிக்க வேண்டாம்.  வேதத்தில் தவறு செய்து குறையோடு இருந்தவர்களை கூட கர்த்தர் தம்முடைய பணிக்காக பயன்படுத்தினார்.  ராகாப் என்னும் வேசி, வேவுக்காரர்களை           சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டதினால் அழிக்கப்படாமல் காக்கப்பட்டாள். விசுவாசிகளின் பட்டியலிலும் இடம் பிடித்தாள் ( எபிரேயர்:11 :31 ). 

நாம் பழையவைகளை களைந்து போட்டு, புது சிருஷ்டியாக மாறும் போது கர்த்தர் நம்மையும் பயன்படுத்துவார்.  எப்படி பயன்படுத்துவார் என்று எண்ணி நீங்கள் குழம்ப வேண்டாம். கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்து தினமும் உங்களுக்கு கொடுக்கப் பட்ட கடமைகளை முறுமுறுப்பில்லாமல் செய்யுங்கள்.  அவர் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வழியிலே ஆறுகளையும் உண்டாக்குகிற கர்த்தர்.    

கடந்த கால பாவங்களை நினையாமல் விட்டு விடுங்கள். கர்த்தர் நம்மை மன்னிப்பதற்கு தயை பெருத்தவராய் இருக்கிறார். அவர் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வழியிலே ஆறுகளையும் உண்டாக்குகிற கர்த்தர். 

எரேமியா : 31 : 34

இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

ஏசாயா : 41 : 18 , 19

உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கி,

வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன்.

ஜெபம்:

அன்புள்ள கர்த்தாவே, நீர் தந்த இந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்.  நாங்கள் பாவிகள் என்று அறிக்கையிடுகிறோம். எங்கள் பாவங்களை தயவாய் மன்னித்து எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும். உம் நாம மகிமைக்காக எங்களை பயன்படுத்தும். ஒரு போது நாங்கள் எங்கள் பாவ வாழ்விற்கு திரும்பி போகாதவாறு எங்களை உம்முடைய சித்தத்தின் மறைவிற்குள் வைத்து பாதுகாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.


No comments:

Post a Comment