Friday, January 1, 2021

நம் மேல் நினைவாயிருக்கும் கர்த்தர்

 


எரேமியா : 29 : 11

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

இந்த வசனத்தை கர்த்தர் எரேமியாவின் மூலம் பாபிலோனுக்கு சிறைப்பட்டு போய் மீதியாய் இருந்த இஸ்ரவேலருக்கு வாக்குத்தத்தமாகக் கொடுத்தார். அனனியா  என்னும் தீர்க்கத்தரிசி எழும்பி, இன்னும் 2 வருடங்களில் சிறையிருப்பின் நாட்கள் முடிவுக்கு வரும் என்று பொய் தீர்க்கத்தரிசனம் உரைத்தான்.

எரேமியா 27  - ம் அதிகாரத்தில் இதைக் காண்கிறோம்.  இஸ்ரவேலர் அந்த தீர்க்கத்தரிசனத்தை நம்பிவிடாமல் இருப்பதற்காக கர்த்தர் எரேமியாவின் மூலம் நிரூபங்களை எழுதி பாபிலோனுக்கு அனுப்புகிறார்.

தங்களுக்கு கர்த்தர் விடுதலை அளிக்கிறார் என்ற நற்செய்தியை ஆவலுடன் காத்திருந்த மக்களுக்கு பாபிலோனில் எழுபது வருஷம் நிறைவேறின பின்பு, சிறை இருப்பிலிருந்து திரும்பி வரப்பண்ணுவேன் என்ற நல்வார்த்தை கூறப்படுகிறது. அதை நிறைவேறப்பண்ணுவேன் என்று கூறுகிறார்.

70 வருடம் என்னும் பொது ஒரு தலைமுறை வாழ்ந்து முடிந்து விடும். அப்படியானால் தாங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவு உடனே வராது என்பதை இஸ்ரவேலருக்கு கர்த்தர் உணர்த்தினார்.  மேலும் கர்த்தர் அவர்கள் பேரில் நினைவாயிருக்கிறார் என்று வாக்கு கொடுக்கிறார்.  அந்த நல்முடிவு தீமைக்கு ஏதுவானது அல்ல, சமாதானத்துக்கு ஏதுவான நினைவுகள் என்று கூறுகிறார்.

அது போல இந்த அநித்தியமான உலகத்திலே நாம் சில பாடுகள் வழியே கடந்து போக கர்த்தர் அனுமதித்து இருக்கலாம்.  அப்பாடுகள், வேதனைகள் நீண்ட நெடிய நாட்கள் நம்மோடிருக்கலாம். ஆனாலும் கர்த்தர் நம் மேல் நினைவாயிருக்கிறார் என்று மறவாதிருங்கள். முடிவிலே நாம் சமாதானத்தோடு வாழும்படியான ஒரு ஜெயத்தை கட்டளையிடுவார். ஏனெனில் நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது என்று ஏசாயா தீர்க்கன் கூறுகிறார்.

ஏசாயா : 53 : 5

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

ஏசாயா : 55 : 8

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஜெபம்:

அன்புள்ள இறைவா, எங்களை வருத்திக் கொண்டிருக்கும் எங்கள் கடந்த கால பாவங்கள், எங்களை வருத்திக் கொண்டிருக்கும் நோய்கள் இவைகளினின்று நீர் எங்களை விடுவிக்க வல்லவர் என்பதை அறிந்து உம்மை துதிக்கிறோம். சோதனைகள், நோய்களினூடேயும் நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி வாழ கிருபை செய்யும்.  நீர் எங்கள் மேல் நினைவாய் இருப்பதற்காக ஸ்தோத்திரம். சமாதானமான வாழ்வை தந்து வழி நடத்தும். ஆமென்.

No comments:

Post a Comment